Tuesday 18 July 2017

ஆசிரியர்களின் அராஜகம்...?


ஆசிரியர்களைப் பற்றி எழுதும் போது அராஜகம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு தான். காரணம் நமது பண்பாடு வேறு. ஆசிரியர்களை நாம் மிக உயரிய இடத்தில் வைத்திருக்கிறோம். மாதா, பிதாவுக்குப் பிறகு அவர்களைத்தான்  நாம் அடுத்த நிலையில் வைத்திருக்கிறோம். குரு என்கிறோம். குரு என்பது தூய தமிழ்ச்சொல்.   குரு என்று மலாய் மொழியில் சொன்னால் அது வெறும் ஆசிரியரைக் குறிக்கும். ஆனால் அதனையே தமிழில் சொன்னால் அது வெறும் ஆசிரியர் மட்டும் அல்ல, ஆசான், குரவர்,  தலைமை, மேன்மை, சிறப்பு, வழிகாட்டி- என்று இப்படியெல்லாம் அதற்குப் பொருள்கள் கூறப்படுகின்றன. அதனால் தான் ஆசிரியர் என்றாலே அவர்கள் மீது நாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம்.

ஆனால் நமது மலேசியப் பள்ளிகளைப்  பொறுத்தவரை ஆசிரியர் என்பவரை வெவ்வேறு கோணத்தில் நாம் பார்க்க வேண்டி உள்ளது. ஆசிரியர் என்பவர், வேறு வேலை கிடைக்காததால்  ஆசிரியாரானவர், கஞ்சா பழக்கம் உடையவர்,  இனப்பாகுபாடு பார்ப்பவர் - இப்படி பல கோணங்களில்.

சமீப காலங்களில் குறிப்பாக இந்திய மாணவர்கள், ஒரு சில மலாய் இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களால்,   பலவகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.  இந்திய மாணவர்கள் மீது இனத்துவேஷத்தைக் காட்டுவதும், காலணிகளால் அவர்களை அடிப்பதும் இப்போது கடைசியாக கன்னத்தில் சூடு வைக்கின்ற அளவுக்கு அது  வளர்ந்திருக்கிறது.

இதே மலாய் ஆசிரியர்கள் ஏன் மலாய் மாணவர்களை அடிக்க முடிவதில்லை?  அவர்கள் குறும்பு செய்வதில்லையா? அவர்களை அடிக்க அவர்களுக்குத் துணிவில்லை. காரணம் ஆளும் அம்னோ கட்சி அதனை ஓர் அரசியல் பிரச்சனையாக்கி அந்த ஆசிரியரை நாட்டை விட்டே துரத்திவிடும்! அவர்கள் ஏன் சீன மாணவர்களை அடிக்க முடிவதில்லை?  சீன மாணவர்கள் மீது கைவைத்தால் அது ஓர் இனப் பிரச்சனையாக உருவாகிவிடும்! இந்திய மாணவர்கள்...? ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில்  ஆண்டி என்பார்கள்.  ஆக அது தான் நமது நிலை. யார் வேண்டுமானாலும் நம் மீது கை வைக்கலாம்.  கல்வி துணை அமைச்சர் மீதே கை வைத்தார்கள்....என்ன ஆயிற்றூ? ஒன்றும் ஆகவில்லை! சகிப்புத் தன்மை உள்ளவர்கள் எனப் பெயர் வாங்கினோம்! அந்தச் சகிப்புத்தன்மை தொடர வேண்டும் என்று நமது மலாய் ஆசிரியர்கள் ஆசைப்படுகிறார்கள். காரணம் அவர்கள் வீட்டில் கூட அவர்கள் பிள்ளைகள் மீது கை வைக்க முடியாது!  ஆனால் பள்ளியில் இந்திய மாணவர்களை ஆசை தீர அவர்களை அடிக்கலாம், உதைக்கலாம், சூடு வைக்கலாம்! கேட்க நாதியற்ற சமூகம். யாரும் கேட்கப் போவதில்லை! கல்வி அமைச்சு கேட்காது! அதுக்குக்  காதில்லை! ம.இ.கா. கேட்காது. அதற்குச் சகிப்புத் தன்மை அதிகம்! 

ஏன் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன? அந்த ஆசிரியர்களுக்கு எந்தப் பிரச்சனையும் எழவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. காரணம் அவர்கள் இந்தியர்கள் அல்ல! உண்மையைச் சொன்னால் அப்படி செய்வதற்கு அவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள்!

நம்மைப் பொறுத்தவரை இது அராஜகம்! அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும். குண்டர் கும்பல்களை வேலைக்கு வைத்திருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது!

No comments:

Post a Comment