Friday 28 July 2017

சுமை தாங்கி


சுமை தாங்கி என்கின்ற ஒரு தமிழ்த்திரைப் படம், ஜெமினி கணேசன் நடித்து,  ஸ்ரீதர்  இயக்கி,  1962-ம் ஆண்டு வெளியான ஒரு படம் என்பதை அந்தக் காலத்து சினிமா ரசிகர்களுக்குத் தெரியும். அதில் தான் "மயக்கமா.. கலக்கமா..!"  என்கிற, ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல் மிகவும் பிரபலம். ஏன், இப்போதும் பிரபலம் தான். இந்தப் படத்தின் கரு என்பது குடும்பச் சுமையைச் சுமக்கின்ற கதாநாயகன்  தான் அந்தச் சுமை தாங்கி.

இந்தச் "சுமை தாங்கி" என்கிற சொல் என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதை சமீபகாலம் வரை  நான் அறிந்திருக்க வில்லை. சைக்கள்களின் பின் பகுதியில் சுமைகளை ஏற்றிச் செல்லும் அதனையும் சுமைதாங்கி எனச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆனால் தீடீரென இந்தச் சுமைதாங்கியைப் பற்றி இரண்டு வாரங்களில் மூன்று முறை என் கவனத்திற்கு வந்தது. ஒரு சொற்பொழிவில் இந்த சுமைதாங்கி கற்கள் சிவகங்கையில் உள்ளதாக ஒருவர் கூறினார். இரண்டாவது சிவகங்கையில் உள்ள ஒருவர் வருகை தந்திருந்தார். மூன்றாவது சிவகங்கையில் உள்ள    சுமைதாங்கி கற்களைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. மூன்றும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக வந்ததால், சரி, நாமும் கொஞ்சம் சொல்லி வைப்போம் என்பதற்குத்தான் இந்தக் கட்டுரை.



பொதுவாக இந்தச் சுமைதாங்கி கற்கள் சிவகங்கை மாவட்டத்தில் தான் அதிகம் காணப்படுகிறது; பேசப்படுகிறது. போக்குவரத்து அதிகம் இல்லாத காலக்கட்டத்தில் இது போன்ற சுமைதாங்கிகள் தாம் மக்களுக்கு இளைப்பாறவும், சுமந்து வந்த சுமைகளை இறக்கி வைக்கவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் உதவியாக இருந்தன. சுமைகளைச் சுமந்து செல்லும் மக்கள் யாருடைய உதவியும் இல்லாத நேரத்தில் அவர்களது சுமைகளை இந்த சுமைதாங்கிகளின் மேல் வைத்துவிட்டு அவர்களே மீண்டும் அந்தச் சுமைகளை  யாருடைய உதிவியும் இன்றி தூக்கிக்கொள்ள உதவும் கற்கள் தான் இந்தச் சுமைதாங்கிகள்.  பெரும்பாலான இந்தச் சுமைதாங்கிகள் ஆற்றோரங்களிலும், சாலை ஓர மரத்தடிகளிலும் தாம்  அமைக்கப்பட்டன. தாகம் தீர்க்கவும்,அமர்ந்து இளைப்பாறவும் பயணிகளுக்காக இந்த வசதிகள். 

இறந்த போர் வீரர்களுக்காகவும், அரசர்களின் நினைவாகவும், இறப்பு, பிறப்பு போன்ற ஞாபகச்சின்னங்களாகவும் இது போன்ற சுமைதாங்கிகள் அக்கலாத்தில் உருவாயின. அரசர்களின் உதவியோடும், அக்காலத்தில் வாழ்ந்த மனிதநேய மிக்க குடிகளாலும் சுமைதாங்கிகள் ஏற்படுத்தப்பட்டன. 

பிற்காலத்தில்,  போக்குவரத்து வசதிகள் அதிகரித்த பின்னர், சுமைதாங்கிகளின் பயன்பாடு குறைந்துவிட்ட நிலையில், அவைகள் மக்கள் மறக்கும் நிலைக்கு வந்துவிட்டன. அரசிடமிருந்தும் புதிய சுமைதாங்கிகள் கட்டுவதற்கான அனுமதியும்     கிடைக்கவில்லை.  ஒரு சில சுமைதாங்கிகள் இப்போது வழிபாடு செய்யும் இடங்களாக மாறிவிட்டன.




தமிழகம் முழுவதும் இது போன்ற சுமைதாங்கிகள் கட்டப்பட்டனவா என்று தெரியவில்லை.  ஆனால் தமிழகத்தில் பல  இடங்களில் இவைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இப்போதும்  இருப்பதாகக் கூறப்படுகின்றது. சிவகங்கை தவிர்த்து, சேலம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி போன்ற இடங்களிலும், திருவாருரில் ஒரு சில இடங்களிலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

போக்குவரத்து குறைந்த காலத்தில், மாட்டு வண்டிகளைப் பயன்படுத்த முடியாத ஏழைகளுக்கு இது போன்ற, பல கல் தூரம் தலையில் பாரங்களைச் சுமந்து செல்லும் ஏழை மக்களுக்கு இந்தச் சுமைதாங்கிகள் மிகவும் பயன் உடையவைகளாக இருந்திருக்கின்றன. 

அக்காலத்திய அரசுகளும், வசதிப்படைத்த பெரியவர்களும் ஏழைகளின் மேல் பற்றும் பாசமும் உடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என அறியும் போது நமக்கும் பெருமையாக இருக்கிறது.


நல்லதொரு நோக்கத்துக்காக இந்தச் சுமைதாங்கிகள் ஏற்படுத்தப்பட்டன.  அவைகள் மக்களுக்குப் பயன் உடையவைகளாகவும் இருந்திருக்கின்றன. 

சுமைதாங்கிகளே! சுமையை மட்டுமா தாங்கினீர்கள்? எங்கள் சுகத்தையும், சோகத்தையும் அனைத்தயும்  அல்லவா தாங்கினீர்கள்!

No comments:

Post a Comment