Monday 10 July 2017

வறுமையை ஒழிப்பது கல்வியே!


துணைப்பிரதமர்,  டத்தோஸ்ரீ அகமது சாகிட், இந்திய அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசும் போது இந்தியர்களின் வறுமையை ஒழிக்க கல்வியே சிறந்த சாதனம் என்று வலியுறுத்திப் பேசியிருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

உண்மையைச் சொன்னால் இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால் நமது இனத்தவருக்கு அடிக்கடி சொல்லித்தான் இதனை நாம் புரிய வைக்க வேண்டியுள்ளது. இன்னமும் நாம் தான், நமது இனத்தவர்கள் தான்,  கல்வியில் பின் தங்கியிருக்கிறோம். எல்லாக் காலங்களிலும் நமது தலைவர்கள் இதனை வலியுறுத்தித்தான் வருகின்றனர். 

நம்மிடையே வறுமையே முக்கியத் தடையாக விளங்குகிறது என்பது தான் உண்மை. தங்களது குழைந்தைகள் படித்து நல்ல நிலமைக்கு வர வேண்டும் என்பதில் எல்லாப் பெற்றோர்களுக்கும் அக்கறையும், ஆர்வமும் உண்டு. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கல்வியே நல்லதொரு  வியாபாரமாகி விட்டது. அரசாங்கப் பள்ளிகள் என்றாலும் அங்கும் அப்படி ஒன்று அனைத்தும் இலவசம் என்று சொல்லுவதற்கில்லை. அங்கும் பணம் தான். முக்கியமானப் பிரச்சனை என்பது பள்ளிப் பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் பேருந்து கட்டணம். இதனைக் கட்ட முடியாமல் பல பெற்றோர்கள் திணறுகின்றனர்.

நமது நாட்டில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் இனம் என்றால் அது நமது இனம் தான். நாம் தான் பலவகைகளில் பாதிக்கப்படுகின்றோம். 

நமது துணைப்பிரதமர் சுட்டிக்காட்டியிருப்பது போல கல்வி தான் முன்னேற்றத்துக்கான முதல்படி. இன்றைய மலாய்ச் சமூகத்தின் முன்னேற்றம் என்பது கல்வியில் இருந்து தான் ஆரம்பமாகிறது. ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் மிகவும் பின் தங்கியிருந்தனர். அவர்களின் கல்வி பொறுப்பை அரசாங்கம் எடுத்துக் கொண்ட பின்னர் அவர்களின் முன்னேற்றம் கிடு கிடு என்று உயர்ந்துவிட்டது. இன்றைய நிலையில் அவர்களுக்குக் கல்வியின் அவசியத்தைப் பற்றி யாரும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு பின் தங்கிய சமூகம் என்னும் நிலையில் இந்திய சமூகத்திற்கு அரசாங்கத்தின்  கருணைப் பார்வை மிகவும் தேவைப்படுகிறது.  அரசாங்கத்தின் உதவி இல்லாமல் கல்வியில் இந்தியச் சமூகம் முன்னேறுவது கடினம். மேற்கல்வி பயில இப்போது வாய்ப்புக்கள் கொடுக்கப் படுகின்றன என்பது மகிழ்ச்சியான ஒன்று என்றாலும் குறைந்த பட்சம் 10 விழுக்காடு கொடுக்கப்பட்டாலே கல்வித் துறையில் நமது சாதனை நிறைவாக இருக்கும். நாம் இன்னும் நிறைய பட்டதாரிகளை உருவாக்கும் நிலையில் இருக்கிறோம். 

இன்று மேற்கல்வியை விட கீழ் நிலையிலேயே நமது நிலை மிகவும் மோசமாக உள்ளது.    இடைநிலைக் கல்வி என்பது எஸ்.பி.எம். மோடு முடிவடைகிறது என்றாலும் அந்தக் கல்வியைப் பெறும் முன்பே சுமார் ஏழாயிரம் மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி விடுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. எஸ்.பி.எம்.மில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் அவர்களுக்கு டிப்ளோமா பெறும் அளவுக்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் ஏழாயிரம் மாணவர்கள் வெளியேறுகிறார்கள் என்றால்  வெளி உலகில் அவர்கள் நிலமை என்ன? இவர்களில் எத்தனை பேர் குண்டர் கும்பல்களிலும், குடிகாரர்களாகவும், தீயச் சக்திகளுடனும் தங்களை இணைத்துக் கொள்ளுகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?

கல்வி என்பது இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான முதல் படி.  வறுமையை ஒழிப்பதற்கு கல்வியே சிறந்த சாதனம்.  விழிப்புணர்ச்சி பெற கல்வியை விட வேறு சிறப்பானது எதுவும்  இல்லை.    

அனைவரும் கல்வி பெறுவோம்! கல்வி கற்ற சமுதாயம் என பெயர் எடுப்போம்!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

No comments:

Post a Comment