Wednesday 19 July 2017

அன்வாரே அடுத்த பிரதமர்...?


வருகின்ற பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் "நாட்டின் பிரதமராக அன்வார் இப்ராஹிம்"  வருவதை  முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுவதாக தனது முழு ஒப்புதலை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் வெளிப்படுத்தியுள்ளார்!

அன்வார் பிரதமராக வருவதை மக்கள் விரும்புகிறார்கள் என்றால் தனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை என்பதாக அவர் கூறியிருக்கிறார். பெர்டானா தலைமைத்துவ அறநிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு அறிவித்திருக்கிறார்.

ஆனால் அவர் சமீபத்தில் இங்கிலாந்து வருகையின் போது "தி கார்டியன்" பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தான் அன்வாரை நாட்டின் பிரதமராக வருவதை வரவேற்கவில்லை என்பதாகவும்  அவர்  கூறியிருந்தார்.  அன்வார், பிரதமருக்கான தகுதி பெற்றவர் அல்ல; அவர் மீதான தகாத உறவு குற்றச்சாட்டுக்கள் இன்னும் உள்ளன என்கிறார் டாக்டர் மகாதிர். 

அன்வார் மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை; அது, டாக்டர் மகாதிரின்,  அன்வார் மீதான காழ்ப்புணர்ச்சியே காரணம் என்கிறனர் அன்வாரின் ஆதரவாளர்கள்.  அன்வார் மீதான சிறிதளவே எதிர்ப்பலைகள் இருந்தாலும் அவருக்குப் பெரியளவில் ஆதரவு அலைகள் உள்ளன என்பதும் மறைக்க முடியாத உண்மை.

அது சரி.  இந்தியர்களைப் பொறுத்தவரை யாரை அவர்கள் ஆதரிக்கின்றனர்?  மகாதிரையா? அன்வாரையா? இந்தியர்களைப் பொறுத்தவரை டாக்டர் மகாதிர் தனது ஆட்சி காலத்தில், சாமிவேலுவுடன் கூட்டு சேர்ந்து,  இந்தியர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்து விட்டார் என்பதாகக் குற்றச்சாட்டு உண்டு. பொருளாதார ரீதியில், உயர் கல்வி கற்பதில், அரசாங்க வேலை வாய்ப்புக்களில் இப்படி அனைத்திலும் இந்தியர்கள் ஏமாற்றப்பட்ட ஒரு சமூகமாக மிகவும் கீழ் நிலைக்குக் கொண்டு சென்றவர் டாக்டர் மாகாதிர். அவர் மீண்டும் பிரதமர் ஆவதை பெரும்பாலான இந்தியர்கள் விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.   இப்போதுள்ள பல பிரச்சனைகளைக்குக் காரணமானவர் டாக்டர் மகாதிர் தான் என்பதில் கருத்து வேறுபாடில்லை.

சரி, அப்படியே அன்வார் பிரதமராக வந்தால் இந்தியர்கள் பிரச்சனைகள் அனைத்தும் கலைந்து விடுவாரா என்று கேட்டால்  அப்படியெல்லாம் சொல்லுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் மேல் உள்ளது வெறுப்பு; இவர் மேல் உள்ளது அனுதாபம்! அவ்வளவு தான். காரணம் சிலாங்கூர் என்பது  எதிர்கட்சியினர் ஆட்சி தான். இந்தியர்களுக்கு அவர்கள் என்ன செய்து விட்டார்கள் என்னும் கேள்வி இப்பவும் எழத்தான் செய்கிறது. குறிப்பாக அரசாங்க வேலை வாய்ப்புக்கள் இன்னமும் எட்டாதக் கனியாகத்தான் இருக்கிறது! கோவில்கள் இன்னும் உடைக்கத்தான் படுகின்றன! 

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுவோம். நம்மிடம் ஒரே ஒரு ஆயுதம் தான் உண்டு. அது தான் விலை மதிக்க முடியாத வாக்குச் சீட்டு. யார் வந்தால் நமக்கு இலாபம் என்பதை வைத்து வாக்களிப்போம். மற்றவர்களை விரட்டி அடிப்போம்!

No comments:

Post a Comment