Sunday 23 July 2017

கேள்வி - பதில் (54)


கேள்வி

தமிழக அரசியலில் ரஜினிக்கு ஆதரவும், கமலுக்கு எதிர்ப்பும் என்று சொல்லலாமா?

பதில்

அப்படி சொல்லுவதற்கில்லை. ரஜினிக்கு எப்படி ஆதரவு உள்ளதோ,  அதே அளவு ஆதரவு கமலுக்கும் உண்டு. குறைத்து மதிப்பிட முடியாது. 

ரஜினி "சிஸ்டம்" சரியில்லை  என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அத்தோடு பிரதமர் மோடியையும் சந்தித்திருக்கிறார். இவைகளெல்லாம் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அத்தோடு தமிழக ஆளுங்கட்சியும் பா.ஜ.க.வோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது! வருகின்ற நான்காண்டுகளையும் எப்படியாவது "கடத்திக்" கொண்டு போக வேண்டும் என்னும் பிடிவாத நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது.  இந்த நான்காண்டுகளில் தங்களுக்குள் என்னன்ன வசதிகள் செய்து கொள்ள முடியுமோ அத்தனையும் செய்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்! அதனால் பா.ஜ.க. என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அத்தனைக்கும் ஒத்து ஊதூம் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்!  ரஜினி வாய் திறக்காத நிலையில் தமிழக அரசுக்கும், நடுவண் அரசுக்கும் அவர் மிகவும் நல்ல மனிதராக இருக்கிறார்!  அரசியல்வாதிகள் விரும்புவதெல்லாம் ரஜினி போன்ற பேசாத நல்ல மனிதர்களைத் தான்! ஆனால் ரஜினி பேச மாட்டார் என்று யார் சொன்னார்? இப்போதைக்கு அவர் பேசவில்லை; அதனால் அவர் நல்ல மனிதர்! அவ்வளவு தான்!

கமல் ஏன் கெட்ட மனிதர் ஆனார்? அரசியல்வாதிகளிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டாரே! அது ஒன்றே போதும்! கேள்வி கேட்பவர்களை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. எதிர்கட்சியினர் கேள்விகள் கேட்கலாம். அது பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். காரணம் அவர்கள் அனைவருமே திருடர்கள்! ஆனால் பொது மக்கள் கேள்வி கேட்டால் அது அவர்களுக்கு ஆபத்து என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.  அதனால் கேள்வி கேட்பவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் கீழ் மிகவும் ஆபத்தானவர்கள் என்று சொல்லி அவர்களை "உள்ளே" தள்ளுகிறார்கள்! அதனால் தான் இப்போது கமலும் ஆபத்தானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்! ஆனால் அப்படி எதுவும் அவர்கள் கமலுக்குச் செய்துவிட முடியாது. முடிந்தவரை எச்சரிக்கைக் கொடுப்பதிலேயே காலத்தைத் தள்ளுவார்கள்!

ஆனால் கமல் செய்வது சரியே! தொடர்ந்து எல்லாப் பிரச்சனைகளுக்கும் அவர் குரல் எழுப்ப வேண்டும். சினிமாத்துறை மட்டும் அல்ல;  ஹைட்ரோ கார்பன், மீதேன் என்று எல்லாப் பிரச்சனைகளிலும் அவர் குரல் எழுப்ப வேண்டும். ஒரு குடிமகனின் கடமையை அவரும் செய்ய வேண்டும்.  அவரின் குரலுக்கு வலு உள்ளது என்பது உண்மை.

நாட்டைக் கொள்ளை அடிக்கும் கும்பலக்கெல்லாம்  குனிந்து   போக வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஒரு சராசரி மனிதன் பேசினால் அவனைக் கைது செய்து "ஆபத்தானவன்" என்று முத்திரைக் குத்தி அவனை சிறையில் தள்ளுவார்கள். அதனால் கமல் இன்னும் பேச வேண்டும்.

கமலுக்கு எதிர்ப்பு என்பதெல்லாம் வழக்கம் போல அரசியல்வாதிகளின் பயமே தவிர வேறொன்றும் இல்லை!


No comments:

Post a Comment