Sunday 2 July 2017

நன்றியுள்ள நாய்!


நாய்களைப் பற்றி பேசும் போது "நன்றியுள்ளது நாய்" என்கிறோம்.  காலங்காலமாக மனிதனுடனேயே வாழ்கின்ற மிருகம் நாய். அதனை ஒரு மிருகமாக நாம் பார்ப்பதில்லை. நமது வீட்டில் வாழ்கின்ற, வளருகின்ற நாய்களை நமது வீட்டில் வளருகின்ற பிள்ளைகளாகவே நினைத்து  வளர்ப்பவர் நிறையவே உண்டு. காரணம் அந்த அளவுக்கு அது நன்றியுள்ள ஒரு பிராணியாக நமது மனதிலே இடம் பிடித்து  விட்டது.

சமயங்களிலே இந்த நன்றியுள்ள பிராணியிடம் அத்து மீறல்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. சமீபத்தில் எனக்குத் தெரிந்த குடும்பத்தில் வளர்ந்த ஒரு நாய் - அதனை மூன்று நாள் குட்டியாக இருந்த போது எடுத்து வளர்த்து இப்போது மூன்று ஆண்டுகள் ஆன பின்னர் - ஒரு நாள் அவர்கள் வீட்டுக் குழந்தையை கடித்துக் குதறிவிட்டது. கத்திக் கழுத்துக்குப் போகும் முன்னர் குழந்தைக் காப்பாற்றப்பட்டது. அது எப்படி ஏன் என்றெல்லாம் யோசிக்க யாருக்கும் நேரம் இல்லை. அடுத்த நிமிடமே அந்த நாய் வீட்டை விட்டு வேளியேற்றப்பட்டது.  வீட்டிலோ விதவிதமான படங்கள், ஏராளமான ஆல்பங்கள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டன! யாருக்காக அழுவது?  குழந்தைக்காவா, நாய்க்காகவா? ஆனாலும் அந்த நன்றியுள்ள ஜீவன் ஏன் அப்படி நடந்து கொண்டது என்பதை அந்த நாயைத் தவிர வேறு யார் அறிவார்?

ஏன் எதற்காக இந்த பின் நகர்வு? சமீபத்தில் வலைத்தலத்தில்  பார்த்த ஒரு காட்சி  மனத்தை உருக்கிவிட்டது. ஒரு நாயை, ஒரு மனிதர் தனது காரின் பின்னால் கட்டிவிட்டு காரை ஓட்டிக் கொண்டு போகிறார். அந்த நாய் காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. அவர் காரை நிறுத்தவில்லை. ஓடிக் கொண்டே இருக்கும் காரின் பின்னால் அந்த நாய் தரையிலேயே இழுத்துக் கொண்டு போகப்படுகிறது. அந்த நேரத்திலும் அந்த நன்றியுள்ள பிராணி தனது எஜமான விசுவாசத்தை மறக்காமல் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது. அந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது? மனதைப் பிழிந்து விட்டது. இப்படி எல்லாம் வாய் பேச முடியாத ஜீவன்களை வதைப்பது மிக மிகக் கொடூரம். அந்தக் கொடூரன் ஏன் அப்படி செய்தான் என்பது நமக்குத் தெரியாது. வேண்டாத நாய்களைக் கவனிக்க எத்தனையோ காப்பகங்கள்  உள்ளன. அவர்களிடம் ஒப்படைப்பதே முறை. வேறு வகையான சித்திரவதைகள் கண்டிக்கத்தக்கது.

நாய் எல்லாக் காலத்திலும் நன்றியுள்ள பிராணி தான். அது தனது குணத்தை மீறுகிறது என்றால் அது ஏன் என்பதை நாம் தான் கண்டறிய வேண்டும். அதற்குப் பொறுமை தேவை.

மனிதன் செய்கின்ற அட்டூழியங்களை விடவா நாய் செய்கிறது? நாய், நன்றியுள்ள பிராணி.  அது என்றென்றும் நன்றியுடையது தான். அதனை பேணி வளர்ப்போம்.


No comments:

Post a Comment