Tuesday 11 July 2017

சீன மாணவர்கள் குறைகிறார்கள்..?


சீனப் பள்ளிகளில் சீன மாணவர்கள் குறைந்து கொண்டு வருவதாக துணைக்கல்வி அமைச்சர் டத்தோ சோங் சின் வூன் கூறியிருக்கிறார்.

சீன மாணவர்கள் குறைவதற்கான காரணம் சீனர்களிடையே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருவதினால் சீன மாணவர்களின் எண்ணிக்கையிலும் அந்தச் சரிவு காணப்படுவதாக அவர் கூறினார். 

ஆனாலும் சீனப் பள்ளிகளின் வளர்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. காரணம் சீனர் அல்லாத மற்ற இனத்து மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சீனப் பள்ளிகளில் கூடிக்கொண்டு வருவதே காரணம்.

நாம் எப்போதுமே ஒரு தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம்.  மலாய் தேசிய பள்ளிகளே எல்லா இனத்தாருக்கும் பொதுவானது என்பது தான் அது. ஆனால் அது பொதுவான, எல்லா இனத்தாருக்கும், ஏற்றப் பள்ளிகளாக இல்லை என்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். தேசியப் பள்ளிகளைப் பொறுத்துவரை அவை இஸ்லாமியப் பள்ளிகளாகச் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுவதுண்டு. அப்படித்தான் அவைகள் செயல்படுகின்றன என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. மேலும் இனப்பாகுபாடும் மாணவர்களிடையே ஆசிரியர்களால் வளர்க்கப்படுகின்றன. மலாய் அல்லாத மாணவர்கள் பல வழிகளில் ஒதுக்கப்படுகின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்களும் உண்டு.  தேசியப்பள்ளிகள் எல்லா மாணவர்களுக்கும் ஏற்றப் பள்ளிகளாக அமையவில்லை அதற்குப் பதிலாக சமயத்தை வளர்க்கும்  பள்ளிகளாக அவைகள் இயங்குகின்றன எனச் சொல்லப்படுகின்றது. பொதுவாக தேசியப் பள்ளிகளின் தரம் என்பது தரமற்றதாகவே இருக்கின்றது என்பது பெற்றோர்களின் முடிவு.

இந்த நிலையில் சீனப் பள்ளிகளில் மலாய்க்கார, இந்திய மாணவர்களின் அதிகரிப்பு என்பது சீனப்பள்ளிகள் வருங்காலங்களில் எல்லா இனத்து மாணவர்களும் ஏற்கக் கூடிய பள்ளிகளாக அமையும் என்பது தான் உண்மை நிலை. அது மட்டும் அல்லாமல் சீனப்பள்ளிகளின் கல்வித் தரம் தேசியப் பள்ளிகளை விட சற்று உயர்வாகவே இருக்கிறது என்பதே பெற்றோர்களின் கணிப்பு. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு என்பது சீனப்பள்ளிகளில் அதிகம்.

இன்றைய நிலையில்  சீனப் பள்ளிகளில் பயிலும் இந்திய, மலாய்க்கார மாணவர்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு என்பதாக துணைக்கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் இந்த எண்ணிக்கை 30 விழுக்காடு வரை அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போதும் சரி, எப்போதும் சரி பெற்றோர்கள் தரமானக் கல்விக்கே முதலிடம் கொடுப்பர். அது சீனப்பள்ளிகளுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். 


No comments:

Post a Comment