Friday 7 July 2017

எத்தனை மொழிகள் உங்களுக்குத் தெரியும்?



மலேசியர்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்? எழுதப்படிக்க என்றால் மலாய்க்காரர்களுக்கு: மலாய், ஆங்கிலம் ஒரு சிலருக்கு அரபு.  சீனர்கள்: மலாய், ஆங்கிலம், மெண்டரின் ஒரு சிலருக்கு மெண்டரின் தெரியாது. இந்தியர்களுக்கு: மலாய், ஆங்கிலம், தமிழ், ஒரு சிலருக்கு தமிழ் தெரியாது.

அது சரி, பேசத் தெரிந்த மொழிகள்? பொதுவாக மலாய் அடுத்ததாக ஆங்கிலம். அரைகுறை தமிழும், அரைகுறை மெண்டரினும் பலருக்கும் தெரியும்! 

சரி, ஏன் இந்தப் பீடிகை? சமிபத்தில் ஒர் தமிழ் இளைஞர் என்னை திணறடித்து  விட்டார்! அவர் ஒரு பட்டதாரி இளைஞர்.ஏற்கனவே வேலை செய்த நிறுவனம் "ஊத்தி" கிட்டதினால் புதிய வேலைக்கு மனு செய்து கொண்டிருந்தார். அவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்த மொழிகள் மலாய், ஆங்கிலம், தமிழ். பேசத் தெரிந்த மொழிகள்? ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறேன், நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்:  இந்தோனேசிய மொழி, தாய்லாந்து மொழி, வங்காளம், இந்தி, தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம், மெண்டரின், ஹோக்கியன்,  வியட்னாம், மியான்மார் - மற்றவைகள் எனது ஞாபகத்திற்கு வரவில்லை! இத்தனை மொழிகளையும் ஏதோ ஓரளவு தெரிந்து வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன்.   ஆனால் இதில் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால் இத்தனை மொழிகளும் தனக்குத் தெரியும் என்று தனது வேலைக்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறாரே அது தான் என்னை கவர்ந்தது! அது ஒரு துணிச்சலான விஷயம் தான்! நன்றாகப் பாருங்கள்.  நாமும் ஏறக்குறைய அந்த மொழிகளோடு ஒரளவு தொடர்பு உள்ளவர்களாகத்தான் இருக்கிறோம். ஆனால் அதனை ஒரு கூடுதல் தகுதியாக  அந்த இளைஞர் பயன்படுத்தியிருக்கிறார். அது ஒரு வித்தியாசமான அணுகுமுறை தானே!

நான் சொல்ல வருவது இது தான். தெலுங்கு மொழி தெரிந்தவர்கள் என்றால் உங்களுக்கு தெலுங்கு மொழி தெரியும் என்று குறிப்புடுங்கள். மலையாள மொழி தெரியும் என்று குறிப்பிடுங்கள். இவைகளெல்லாம் உங்களுக்கு ஒரு கூடுதல் தகுதியைக் கொடுக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். உங்களிடம் யாரும் மலையாள மொழியில் நேர்காணல் காணப்போவதில்லை. அதிகமாக ஒரு மொழி தெரியும், அதுவே ஒரு கூடுதல் தகுதி.

பல மொழிகள் தெரிவது நல்ல விஷயம் தான். நம்மில் பலர் சீன மொழி பேசுகிறோம். சீனர் தமிழ் பேசுவது உண்டு. தமிழ் பேசும் மலாய்க்காரரும் உண்டு. இப்படி யார் என்ன மொழி பேசுவார் என்பதே நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எனக்குத் தெரிந்த சீன நண்பன் ஒருவன் தமிழ் பேசுவான், மலையாளம் பேசுவான் - இதையெல்லாம் விட நிமிடத்திற்கு நிமிடம், நாம் கேட்டிராத, நமது பாட்டிகளின் கிராமத்து பழமொழிகளை அள்ளி அள்ளி வீசுவான்! நமது அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்களோ இயல்பாகவே அவர்களின் மொழி நமக்கும் ஒட்டிக்கொள்ளும்!

வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளையும் குறிப்பிடுங்கள். அலட்சியம் வேண்டாம். இந்த கூடுதலான  பேசும் மொழி ஆற்றல் ஒரு பெரும் தகுதியே.

நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!

                      

No comments:

Post a Comment