Saturday 1 July 2017

அமைச்சரே தவறான முன்னுதாரணம்!


இந்திய மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் செய்தது எந்த வகையிலும் நியாயமாகப் படவில்லை. சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பது என்பது சரியான  எடுத்துக்காட்டு அல்ல. விவசாய அமைச்சர் என்பதால் ஆடு, மாடுகளைப் பார்த்து அவருக்கும் இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டு விட்டதோ, தெரியவில்லை! 


அமைச்சர் பதவி என்பது ஏதோ பீடி, சிகிரெட் விற்பவன் என்னும் மனநிலையில் இருப்பது அல்ல. மிகவும் உயர்வான பதவி. மிகவும் கௌரவமான பதவி.  மிக முக்கியம்,  மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க வேண்டிய ஒரு பதவி.

தூய்மை இந்தியா என்று சொல்லிவிட்டு அமைச்சரே தூய்மைக்கு ஒரு  மரியாதை கொடுக்காவிட்டால் பின்னர் யார் தான் கொடுப்பார்?  யார் தான் தூய்மைக்குப் பொறுப்பு? அது ஒவ்வொரு இந்தியனின் கடமை அல்லவா.

இந்தியாவைப் பற்றி பேசும் போது நம் கண் முன்னே நிற்பது அதன் அசுத்தம் தான். எத்தனையோ வழிபாட்டுத் தலங்களைப் பார்க்கிறோம். எங்கே போனாலும் முகத்தைச் சுழிக்கும் சூழல் தான். காரணம் அதன் அசுத்தம். பெரிய நாடு, நிறைய ஏழைகள் என்று சொல்லி நமக்கு  நாமே சமாதானம் அடைகிறோம்! ஆனால் இவைகள் எல்லாம் கலையக்கூடியவைகள் தான். அப்படி ஒன்றும் இமாலயப் பிரச்சனை அல்ல.  சுத்தத்தின் முக்கியத்துவம் சேர வேண்டியவர்களுக்குப் போய்ச்  சேரவில்லை. அதனால் தான் "தூய்மை இந்தியா திட்டம்" என்றெல்லாம் திட்டம் போட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் தான் மாண்புமிகு அமைச்சர் ராதா மோகன் சிங் ஒரு தவறான எடுத்துகாட்டாக - மற்றவர்களுக்குத் தேவையற்ற  முன்னுதாரணமாக - நகைச்சுவை நாயகனாக - மக்கள் முன் காட்சியளிக்கிறார்!  அமைச்சரே இப்படி என்றால் ஒரு சாராசரி மனிதன் என்ன நினைப்பான்? அமைச்சர் தன்னை 
விவசாய கால்நடைகளோடு ஒப்பிடுவது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது அல்லவா! வருந்துகிறோம்!

No comments:

Post a Comment