Friday 28 July 2017

இந்தியர்களை ஓரங்கட்டியவர் மகாதிர்!


சமீபத்தில் ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ், எதிர்கட்சி எம்.பி. யான குலசேகரனுக்கு  பதிலளிக்கும் வகையில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

"இந்நாட்டில் இந்தியர்கள் ஒரங்கட்டப்பட்டது துன் மகாதிரினால் தான் என்பது மறுக்க முடியாத உண்மை!"  என்பதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

துன் மகாதிர் தான் குற்றவாளியே தவிர இன்றைய பிரதமர் நஜிப் அல்ல என்பது தான் அவருடைய வாதம். அப்படியே இருக்கட்டும். துன் மகாதிர் பிரதமராக இருந்த போது அப்போதே அவரும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். "இந்தியர்களின் தேவைகளைப் பற்றி ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ சாமிவேலு எதனையும் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை" என்பதாக!

ஆக, குற்றம் என்பது முன்னாள் பிரதமர் மகாதிர் மீது  மட்டும் அல்ல ம.இ.கா.வின் மீதும் சேர்த்துத் தான்!  இப்போதும் அதே குற்றச் சாட்டுக்கள்  உண்டு. இப்போதாவது இந்தியர்களின் பிரச்சனைகள் அமைச்சரைவையில் பேசப்படுகிறதா என்றால் இப்போதும் அதே "பேசப்படுவதில்லை" என்பது தான்!

பேசப்படுகிறது என்றால் தமிழ்க்கல்வி பிரச்சனையை ஏன் ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை? கேட்கோ பிரச்சனையை ஏன் ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை?  ஏன் இந்தியர்கள் அராசாங்கத்தில் வேலை வாய்ப்புக்களைப் பெற முடியவில்லை? எந்தப் பிரச்சனையானாலும் அந்தப் பிரச்சனையை அமைச்சரவையில் கொண்டு போக முடியாததினால் தானே  இப்போது மாபெரும் வியூகத்திட்டம்  என்பதாகச் சொல்லி இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தது போல தேர்தலுக்கு முன்பாக "அசத்திக்" கொண்டிருக்கிறீர்கள்? சரி, வியூகத்திட்டம் இருக்கட்டும். கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் நஜீப் - இந்தியர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய சாதனைகள் என்ன என்பதை பட்டியிலிட்டுக் காட்டுங்களேன். யார் வேண்டாமென்றார்! பொது மக்களும் பார்த்து பரவசமடையட்டுமே!

இந்தியர்களை ம.இ.கா. ஏமாற்றுகிறது என்பதால் தானே மக்கள்,  நீங்கள் எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அது "நிறைவேறாது"  என்று மனத்தளவில் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்!  வியூகத் திட்டம் வந்த பிறகு செடிக் அலுவலகத்தில் 50 பேர் வேலை செய்கிறார்கள் என்பது என்ன சாதனையா? அதில் 48 மலாய்க்காரர்களும், 2 இந்தியர்கள் இருப்பார்கள்! அவர்களால் ஆகப்போவது என்ன?

இந்தியர்களின் தகவல்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளன. எந்த ஒரு வியூகத்திட்டமும் இல்லாமலே, இந்தியர்களின் பிரச்சனையை - மனம் வைத்தால், மனம் வைத்தால் மட்டுமே - உங்களால் தீர்க்க முடியும். இல்லாவிட்டால் அடியோ, உதையோ வாங்கி, நீங்களும் இந்தியர்களை ஓரங்கட்டி விடுங்கள்! இந்தியர்கள் தாங்களாகவே தங்களைப் பார்த்துக் கொள்ளுவார்கள்!

No comments:

Post a Comment