Monday 24 July 2017

கேள்வி - பதில் (55)


கேள்வி

"சர்வதேச சட்டப்படியே மீனவர்களை இலங்கை கடற்படை  கைது செய்கிறது" என்று தமிழிசை சவுந்தரராஜனின் கருத்து சரியானாதா?

பதில்

அவரது கருத்தாக அதனை அவர் சொன்னாலும் அது பா.ஜ.க. வின் கருத்தாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இது மிகவும்  ஆபத்தான கருத்து.  தமிழிசை பா.ஜ.க. வின் தமிழக மாநிலத் தலைவர். அவர் சொல்லுகின்ற கருத்து எதுவாக இருந்தாலும் அவர் பிரதமர் மோடியின் கருத்தைத் தான் பிரதிபலிக்கிறார் என்பது தான் பொருள்.  பிரதமரின் கருத்தை தமிழகத்தில் மெல்லத் திணிக்கிறார் என்பதாகத்தான் நாம் பார்க்க வேண்டும். 

பிரதமர் சொல்லுவது சரி என்றால் தமிழக மீனவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதையும் தமிழிசை பார்க்க வேண்டும். மீனவர்கள் சொல்லுவதெல்லாம் தாங்கள் இந்திய எல்லையில் மட்டுமே மீன் பிடிப்பதாகச் சொல்லுகிறார்கள். இதனை அவர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினரே அத்துமீறி இந்திய எல்லையில் நுழைந்து தங்களைத் தாக்குவதும், சுடுவதும் எல்லாக் காலங்களிலும் தொடர்கதையாகவே நடைபெறுவதாக மீனவர்கள் கூறி வருகின்றனர். தமிழிசை,  மோடி சொல்லுவதை மட்டும் கேட்காமல் மீனவர்களும் என்ன சொல்லுகிறார்கள் என்பதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.    

தொடர்ந்து நடைபெறுகின்ற இந்த வன்முறையை  நிறுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதைத் தான் தமிழிசை யோசிக்க வேண்டும்; பிரதமரிடம் சிபாரிசு செய்ய வேண்டும்.  தமிழர்களின் நலனை பிரதமர் மோடி அலட்சியம் செய்கிறார் என்பது தமிழர்களிடையே உள்ள பொதுவான கருத்து. அதனை உறுதி படுத்துவது போலத் தான் தமிழிசையும் பேசுகிறார்.    

தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பா.ஜ.க. வின் மாநிலத் தலைவர். மற்ற மாநிலத் தலைவர்கள் தங்களது மாநிலத்திற்காக பேசும் போது இவர் மட்டும் தமிழ் நாட்டை புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை.  அவர் அநியாயத்திற்குத் துணை போக வேண்டாம். குறைந்த பட்சம் நியாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டும்.

ஏழை மீனவர்களுக்காக அவர் குரல் கொடுப்பார் என நம்புவோம்! தீர்வை நோக்கி அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்ப்போம்!                                                                                                                                                                                                                                                                                       

No comments:

Post a Comment