Friday 11 August 2017

அஸ்லினா, நீங்கள் ஒருவரே ஆம்பிளை!


பிரதமர்துறை அமைச்சர், அஸ்லினா ஒஸ்மான் நல்லதொரு கருத்தைச் சொன்னார். அப்படி ஒரு கருத்தைச் சொல்ல துணிவு வேண்டும். இதுவரை எந்த ஒரு அமைச்சருக்கும் சொல்ல வராத, சொல்லப் பயந்த ஒரு கருத்தை தைரியமாகச் சொன்னார்.

ம.இ.கா. அமைச்சர்கள் வாய் திறப்பதில்லை, வழக்கம் போல! அவர்களைக் குற்றம் சொல்லுவதிலும் பயனில்லை. நான்கு பெண்டாடிட்காரர்கள் கருத்துச் சொல்லுவார்கள் என எதிர்பார்ப்பது மடமை!

அப்படி என்ன தான் சொன்னார்? "அவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு விட்டு,  தங்கள் மதங்களை விட்டு விட்டு ஒடி வரும் போது, அவர்களின் குடும்பத்தின் நலனையும் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும். தங்களை 'ஆம்பிளை' என்று நினைத்தால் முறையான மண விலக்குப் பெற்று இஸ்லாத்திற்கு வர வேண்டும். ஷரியா சட்டத்தைப் பயன்படுத்தி  ஷரியா நீதிபதி பின்னால் போய் ஒளியக் கூடாது!" 

இதனைத் தான் அஸ்லினா இஸ்லாத்திற்கு வரும் - தங்களை "ஆம்பிளே" என்று சொல்லிக்கொள்ளும் ஆண் பிள்ளைகளுக்கு விடுத்திருக்கும் சவால்!  நாம் அவரை முழுவதுமாக ஆதரிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். காரணம், நாமும் அதனைத் தான் காலங்காலமாக  சொல்லி வருகிறோம்.

இந்த நேரத்தில் நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை நாட்டில் உள்ள இஸ்லாமியத் தலைவர் யாரும் சொல்லவில்லை. இஸ்லாமிய அறிஞர்கள் யாரும் சொல்லவில்லை. இஸ்லாமிய இயக்கங்கள் சொல்லவில்லை. மத மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ஜாக்கிம் சொல்லவில்லை.  பாஸ் கட்சி சொல்லவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் சொல்லவில்லை என்றால் அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்பது தான் பொருள்! அப்படி என்றால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?  ஒருவர் இஸ்லாத்திற்கு வருவதற்கான தகுதி என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் குடும்பம் பிரிவது என்பது ஏற்புடையதே.  ஒருவர் இஸ்லாத்திற்கு வரும் போது  அவர்கள் ஒன்பது பேர் அடங்கிய குடும்பம் நடு முச்சந்திக்கு வந்தாலும் அது அவர்களின் பாடு. அது மதம் மாறி வருபவரின் பிரச்சனை அல்ல. மண விலக்கு என்பது அவசியம் இல்லை. இப்படித் தான் அவர்கள் சிந்திக்கிறார்கள்.

இப்படி ஒரு சிந்தனை உள்ள இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மத்தியில், ஒரு அமைச்சர், துணிவாக தனது கருத்தைச் சொன்னது மிகவும் வரவேற்கத்தக்கது. ஒரு பெண் என்பதால் பெண்கள் மேல் அவருக்கு ஓர் அனுதாபம் இருக்கலாம். அது மட்டும் அல்ல. பொதுவாக இஸ்லாமியப் பெண்களின் அமைப்புக்கள் கூட அமைச்சர் அஸ்லினாவின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.  ஆனால் இஸ்லாமிய சமயத்தில் வழக்கம் போல் ஆண் ஆதிக்கம் அதிகம் என்பதால் பெண்களின் கருத்துக்கள் அலட்சியம் செய்யப்படுகின்றன.

எது எப்படி இருப்பினும் அமைச்சர் அஸ்லினாவின் துணிவான கருத்துக்களுக்குத் தலை வணங்குகிறோம்.

இறுதியாக, அஸ்லினா! நமது அமைச்சரவையில் இருக்கும் ஒரே ஆண்பிள்ளை நீங்கள் தான்! வாழ்க! வளர்க!

No comments:

Post a Comment