Monday 14 August 2017

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை!


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதை அறியாதார் யார்? நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். குறைந்த பட்சம் மற்றவர்களிடையே பேசும் போது இந்த வரிகள்  நமக்குத் தேவைப்படுகிறது. மற்றபடி தாயை யாரும் சிறப்பாகவும் பார்ப்பதில்லை; கோவிலாகவும் பார்ப்பதில்லை! அதெல்லாம் இளமைற் காலத்தோடு சரி!

இப்படி சிறப்பாகவும், கோவிலாகவும் பார்ப்பவர்களில் "பிக் பாஸ்" காயத்ரி ரகுராமும் ஒருவர் எனத் தைரியமாக சொல்லலாம்.

நான் BIGG BOSS பார்ப்பதில்லை. ஆனால் இணையத்தை வலம் வரும்போது அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதால் கொஞ்சம் நேரம் அந்தப் பக்கம் போவதுண்டு!  அப்படி இடை இடையே பார்த்ததில் காயத்ரி ரகுராம்,  அம்மாவை மதிக்கும் மகளாக ஊர் அறிய ஊர்வலம் வருகிறார்!  

"நான் யார் சொன்னாலும் கேட்கமாட்டேன். என் தாயார் சொன்னால்  மட்டுமே கேட்பேன்!" என்பது அவரின் புகழ்பெற்ற வரிகள். ஒரு சிலர் சொல்லலாம்: ஏழு கழுதை வயசாச்சு இன்னுமா அம்மா பேச்சைத்தான் கேட்பேனு செல்லுற!   ஆனால் அதனால் என்ன?  ஏழு கழுதை என்ன எட்டுக் கழுதை வயசானாலும் அம்மாப் பேச்சைப் கேட்பது என்பது நல்ல பழக்கம் தானே. அவருக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு, மூன்று கழுதை வயசு தானே  இருக்கும்!

ஆனாலும் இந்த நேரத்தில் ஒன்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" என்று சொல்லுகிறோம் அல்லவா, அந்தத் சிறந்தத் தாயின், அந்தக் கோவிலைப் போன்ற தாயின் சொல்லைக் கேட்பது தான் சிறப்பிலும் சிறப்பு. அது தான் ஒரு பெண்ணுக்குச் சிறப்பைக் கொண்டு வரும்.

காயத்ரி ரகுராம் கூட அவரின் தாயின் சொற்படி தான்  அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார் என நம்பலாம்! அந்த நிகழ்ச்சியில் அவரின் நடவடிக்கைகள் மக்களை முகம் சுளிக்க வைத்தது உண்மை.  "சேரி பிகேவியர்" என்று அவர் கூறிய வார்த்தை மிகப் பிரபலம். தாயின் பிரதிபலிப்பாக  இருக்கலாம்! அவர் அமெரிக்காவில் போய் குடியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் அந்தச் சேரி பிகேவியர் அவர் அமெரிக்காவில் வாழ்ந்தும் கூட அவரிடமிருந்து போகவில்லை! தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது இவர் மட்டில் அது உண்மை! 

தமிழ் நாட்டுக்காரன் அமெரிக்கா போனால் என்ன, ஐரோப்பா போனால் என்ன,  அம்மா எப்படி வளர்த்தாரோ அப்படித்தான் அவன் எங்குப் போனாலும் இருப்பான்! தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்று தாயும் உணர்ந்திருந்தால் இந்த "சேரி பிகேவியர்" எல்லாம் எங்கிருந்தாலும் வாயில் வராது! பண்பான வார்த்தைகளே வெளிப்படும்.

எப்படி இருந்தாலும் "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" என்பது உண்மையிலும் உண்மை. அந்தப் போற்றுதலுக்கு உள்ள தாயை வணங்குவோம்!
                                                                                                                     

No comments:

Post a Comment