Wednesday 30 August 2017

ஒரு பசும்பாலின் கதை...!


இந்தியாவில் மாடு,  மாட்டிறைச்சி,  மாட்டு வியாபாரம், இறைச்சி ஏற்றுமதி, மாடுகளை ஏற்றிக் கொண்டு போன லாரி ஓட்டுனரை அடித்து உதைத்தல் -  என்று இப்படியெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தன.  சமீபத்தில் எங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு மலாய் இளைஞன்  ஒரு சோகக் கதையைச் சொன்னான். அவனது கிராமத்தில், அவனது பெற்றோர் ஒரு திருமண நிகழ்ச்சிக்குப் போய் விட்டனர். அடுத்த நாள் தான் அவர்கள் வீடு வந்தனர். வந்து பார்க்கும் போது ஆடு, மாடு, கோழி, குருவி என்று எதனையும் விட்டு வைக்கவில்லை. அத்தனையும் களவாடப்பட்டு விட்டன. ஒவ்வொரு மாடும் ஆயிரம் வெள்ளிக்கு மேலே. 

இந்த நேரத்தில் எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை தான். சும்மா ஒரு பழைய ஞாபகம்.

நீண்ட காலத்திற்கு முன் நா.பார்த்தசாரதியின்  "தீபம்"  இதழில் ஒரு கதை படித்தேன். அரைகுறையான ஞாபகம் தான் இப்போது. ஒரு மனிதர். அவர் ஒவ்வொரு நாளும், காலையில் வேலைக்குப் போகுமுன்னர், தேநீர் அருந்துவது வழக்கம்.  பல உணவகங்களில் தேநீரைச் சுவைத்த பின்னர் ஒரே ஒரு உணவகத்தின் தேநீர் அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. தேநீருக்குப் பயன்படுத்தும் பசும்பால் நல்ல கெட்டியாகவும் சுவையாகவும் இருந்தது. அந்த சுவையில் அவர் மயங்கிப் போனார்!  ஒரு நாள் அவருக்கு மனதிலே கொஞ்சம் நெருடல். அதெப்படி? மற்ற உணவகங்களிலே இல்லாத ஒரு சுவை இங்கு மட்டும் எப்படி? வேறு எதையாவது பாலில் கலக்கிறார்களா? ஒரு வேளை மாவாக இருக்குமா? சந்தேகம் தான்! யாரிடமும் கேட்க முடியவில்லை. உண்மை வெளி வராது என்பது அவருக்குத் தெரியும். ஒரு நாள் எப்போதும் விட கொஞ்சம் முன்னதாகவே அந்த உணவகத்திற்குக் கிளம்பி விட்டார். போகும் வழியில் அந்த உணவகத்தின்,  பால் வாங்கி வரும் வேலையாளை,  இடையிலேயே பார்த்து விட்டார். அந்த வேலையாள் கையில் ஒரு பாத்திரத்துடன் பால் வாங்க போய்க் கொண்டிருந்தார். சரி! இவரைப் பின் தொடர்வோம் என்று அந்த வேலையாளைப் பின் தொடர்ந்தார். அந்த வேலயாள் நேராக மாடுகளை வெட்டும் அறுப்புக் கொட்டகையினுள் நுழைந்தார். அங்கு மாடுகள் வெட்டப்பட்டக் கொண்டிருந்தன. ஒரு பசுமாடு முன் அந்த வேலையாள் நின்றார். பசுமாடு வெட்டப்படுவதற்குத் தயார் நிலையில் இருந்தது. பசுமாடு வெட்டப்பட்டது. அந்த வேலையாள், அந்தப் பசுமாடு வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போதே,  மாட்டின் காம்பைப் பிடித்து, இழுத்து இழுத்து, தனது பாத்திரத்தில் பாலை நிரப்பிக் கொண்டிருந்தார்.

இரகசியம் புரிந்து விட்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு அங்கிருந்து ஓடிப் போனார்.  அதன் பின்னர் அவர் தேநீர் குடிப்பதையே மறந்து விட்டார். அவர் மட்டுமா? நானும் பசும் பால் குடிப்பதையே மறந்து போனேன்.

மனித இனம் இப்படியா ஈவு இரக்கமற்று..?

No comments:

Post a Comment