Sunday 6 August 2017

முனைவர் கௌஷல் பன்வார்


சில செய்திகள் நம்மை அதிர வைக்கும்; அசர வைக்கும்; உந்துதலையும் கொடுக்கும்.

 முனைவர் கௌஷல் பன்வாரைப் பற்றி படிக்கும் போது ஒரு பெண் எப்படி எல்லாத் தடைகளையும் மீறி, எல்லா முட்டுக் கட்டைகளையும் முறியடித்து, தடைக்கற்களையே படிக்கற்களாக மாற்றி அமைக்க முடியும் என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு.

இந்தியா, ஹரியானா மாநிலத்தைச் சார்ந்தவர் கௌஷல் பன்வார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தலித் என்றாலும் ஆகக் கடைசி - அடிமட்ட தலித். இவர்கள் தான் மனித மலம் அள்ளும் அடிமட்ட வேலையைச் செய்பவர்கள். தமிழ் நாட்டில் இவர்களை அருந்ததியர் என்பர். என்ன தான் அரசு சட்டம் கொண்டு வந்தாலும் சட்டத்தை அமலாக்கம் செய்பவர்களே இந்தச் சட்டங்களை எல்லாம் மீறி இந்த மனிதர்களைக் கீழ் நிலையிலேயே வைத்திருக்க விரும்புகின்றனர். இன்றும் அப்படியே!




கௌஷல் பன்வார் கொஞ்சம் வித்தியாசமான பெண். இளம் வயதிலேயே சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என விரும்பினார். அவருக்கே அதற்கான காரணம் தெரியவில்லை.  விரும்பினார் அவ்வளவு தான். சமஸ்கிருதம், தெய்வ மொழி என்பது பார்ப்பனிரின் நம்பிக்கை. காஞ்சி சங்கரராச்சாரியார்   தன்னுடைய வருகையாளர்களுடன் தமிழில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அந்த வருகையாளர்கள் போன பின்னர் உடனடியாகப் போய் குளித்து விட்டு வருவாராம்! அப்படிப்பட்டவர்கள் பயன்படுத்தும்  ஒரு மொழியை ஒரு தலித் படிப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. கௌஷலுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்ததே ஒரு சவால்..

தனது கிராமத்தில்  பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தனது உயர்கல்விக்கு, பல போராட்டங்களுக்குப் பின்னர் சமஸ்கிருதத்தைப் பாடமாக  தேர்ந்து எடுத்தார் கௌஷல். கடைசியில் சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டமும் பெற்றார். இப்போது சமஸ்கிருத பேராசிரியையாக பணி புரிகிறார்.

ஒரு சில விஷயங்களை முனைவர் கௌஷலின் வாழ்க்கையில் இருந்து நாம் புரிந்து கொள்ள  வேண்டும். மிக மிக கீழ்மட்டத்தில் உள்ள  ஒரு சமூகத்திலிருந்து வரும் ஒரு பெண்ணுக்கு யார், எவர் உந்துதல் சக்தியாக இருந்தது? அவருடைய தந்தையாரைத் தவிர வேறு எவரும் இல்லை. படிக்காத தந்தை, மலம் அள்ளும் அந்தத் தந்தை சொன்னவைகள் எல்லாம் வேத வாக்காக அவர் எடுத்துக் கொண்டார்:    

      "நீ தொடர்ந்து படி. எக்காரணத்தைக் கொண்டும் உனது கல்வியை நிறுத்தி விடாதே. கல்வியில் மிக மிக உயரே போ. உயர்ந்த சாதியினர் உன்னை - அவர்களின் வார்த்தைகளால் உன்னை - வறுத்தெடுப்பார்கள். கண்டு கொள்ளாதே! துளைத்து எடுப்பார்கள். துவண்டு விடாதே! உனது கல்வியை வைத்துத் தான் நீ அவர்களை திருப்பி அடிக்க முடியும்!"

அவர் தந்தை சொன்னவைகள் அனைத்தும் நடந்தன. கௌஷல் எந்த நேரத்திலும் தடுமாறவில்லை. அவமானங்களைத் தாங்கிக் கொண்டார். அவரின் தொடர் கல்வி என்பது யாரிடமும் கிடைத்த உதவி அல்ல. அனைத்தும் அவர் சம்பாதித்தவை. சாலைகளில் வேலை; வீடுகளில் வேலை;  மலம் அள்ளும் வேலை. இப்படிச் சம்பாதித்துத் தான் அவரின் கல்வியை அவரால் தொடர முடிந்தது. இந்த வேலைகளுக்காக அவர் எந்த நேரத்திலும் வெட்கப்பட்டது கிடையாது. அவருடன் படிக்கும் மாணவிகளின் வீடுகளிலும் வேலைகள் செய்திருக்கிறார்; மலமும் அள்ளியிருக்கிறார். அப்படி என்றால் கல்லூரியில் அவருக்குக் கிடைத்த மரியாதை எப்படி இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

சரி! இப்போது சமஸ்கிருதப் பேராசிரியை. இப்போது பழைய நிலையிலிருந்து மீண்டு விட்டாரா? இல்லை! இல்லை! இல்லை! இப்போதும் அவரைப் பார்த்து  கேலி, கிண்டல் தொடரவே செய்கின்றன.

ஆனால் கௌஷலிடம் ஒரு நல்ல பழக்கம். எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.!  கவலைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. உயர்வர்க்கத்தினர் தங்களது 'பிடி'யை விடப்போவதில்லை. அவர்களை மறந்து விட்டு, அவர் சார்ந்த சமுகத்தை எப்படி உயர்த்தலாம் என்னும் பணியில் ஈடுபட்டிருக்கிறர். அது ஒரு குடிகார சமூகம். அவர்களைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. மலக்கழிவுகளை அள்ளும் சமூகம் அப்படித்தான் இருக்க முடியும். இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  புத்தகங்கள் எழுதுகிறார். அனைத்தும் தலித்துகளின் முன்னேற்றத்திற்காக. அவரின் வாழ்க்கை இலட்சியம் என்பது தலித்துகளின் முன்னேற்றம் பற்றி மட்டுமே.

முடியாதது என்று எதுவும் இல்லை. அதைத்தான் முனைவர் கௌஷல் பன்வாரின் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பாடம்! "நமக்கும் கீழே இருப்பவர் கோடி!"   அந்தக்கோடியிலும் இன்னும் கீழ்க் கோடியில்  இருந்த ஒருவர் சாதனைப்  படைக்கும் போது நம் அனைவராலும் முடியும்! முடியும்! முடியும்!






No comments:

Post a Comment