Friday 18 August 2017

உணவகத்தில் எலியின் உலா...!


எலிகளும் இப்போது மனிதர்களுடன் போட்டிப் போட ஆரம்பித்து விட்டன! குப்பைகளையே குழப்பிக் கொண்டிருந்த எலிகள் இப்போது தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டு, செவன் லெவன், உணவகங்கள், மருத்துவமனைகள் என்று சுழன்று கொண்டிருக்கின்றன!

கடைசியாக கிடைத்த செய்தியின் படி, கிள்ளான் துங்கு அம்ப்புவான் ரகிமா மருத்துவமனையின் உள்ள உணவகத்தில் எலி பலே கில்லாடித்தானம் செய்வதை சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக  கலக்கிக் கொண்டிருக்கின்றது!


மருத்துவமனை உணவகங்களில் நோயாளிகளும் சாப்பிடுகிறார்கள்; நோயாளிகளைப் பார்க்க வருகின்ற வருகையாளர்களும் சாப்பிடுகிறார்கள். இந்த எலியார் செய்கின்ற வேலையைப் பார்க்கின்ற போது நோயாளிகளின் நோயை அதிகரிக்கவும், நோயற்றவர்களை நோயுற்றவர்களை ஆக்கவும் மருத்துவமனை ஏதோ எலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது போல தோற்றம் அளிக்கிறது!

எலிகள் மருத்துவமனையின் உணவகத்தில் மட்டும் அல்ல மருத்துவமனையின் உள்ளும் உலா வருவதாக நோயாளிகள் கூறுகின்றனர். ஒரு சில நோயாளிகள் எலிகளின் மூலம் கடியும் பட்டிருக்கின்றனர் என்பதாக நோயாளிகளின்பக்கம் இருந்தும் செய்திகள் வருகின்றன!

மாவட்ட சுகாதார அலுவலகம் உணவகத்தை சுத்தம் செய்ய இரண்டு வார கால அவகாசம் உணவகத்திற்குக்         கொடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

உணவகத்திற்கு மட்டும் தானா இந்த "சுத்தம்" என்பது நமக்குப் புரியவில்லை. மருத்துவமனையின் மற்ற பகுதிகளிலும் சுத்தம் பேணப்பட வேண்டும் ஏன்பதும் முக்கியம். சுத்தம் சுகம் தரும் என்பதை மருத்துவமனை ஊழியர்களுக்கும் மீண்டும் பாடம் நடத்தப்பட வேண்டும். ஒரு மருத்துவமனையே சுத்தத்தின் மீது     இந்த அளவுக்கு அக்கறையற்று இருந்தால் நோயாளிகளின் நிலைமை என்ன ஆவது?

மேலே படத்தில் எலியார் நாம் சாப்பிடுவதற்கு முன்னர் முட்டைக்கோசை அவர் முதலில் ருசி பார்க்கிறார்! அப்புறம் தான் நமக்கு!

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment