Saturday 19 August 2017

வன்முறை ஆரம்பமா...?


தேர்தல் வரப்போகிறது என்றாலே ஆங்காங்கே ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். சமீபத்தில் நடந்த இரு சம்பவங்கள் அதன் மணியோசையா என்று கணிக்க முடியவில்லை.

முன்னாள் பிரதமர் மகாதிர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அடிதடி அசம்பாவிதங்கள். இதற்குப் பின்னணியில் யாராக இருக்கக் கூடும் என்பதில் நமக்கு ஒரு கருத்து இருந்தாலும் காவல்துறை அதனை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. வழக்கம் போல அவர்களுக்கென்று சில நடைமுறைகளை அவர்கள் வைத்திருப்பார்கள்! அத்தோடு சரி!

அடுத்து ஹின்ராஃப் தலைவர் பி. வேதமூர்த்தி தனது அலுவலகத்திலேயே தாக்கப்பட்ட சம்பவம். அவர்களைப் தாக்கியவர்கள் திருடர்கள் அல்ல. ஆனாலும் அந்தச் சம்பவத்தில் வேதாவின் மனைவியும் தாக்கப்பட்டிருக்கிறார்.  அவர் அணிந்திருந்த நகைகளும், கைத்தொலைப்பேசியும் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன. அது ஒரு கொள்ளைச் சம்பவம் போன்று தோன்றினாலும் அது கொள்ளைச் சம்பவம் அல்ல. அங்கு, அந்த இடத்தில் அரசியல் பேசப்பட்டிருக்கிறது! ஆக, இதன் பின்னணியில்  அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவு.

வேதாவைத் தாக்கியவர்கள்,  அவர் தொடர்ந்து அரசாங்கத்தைக் குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். கழுத்திலும் கத்தியை வைத்து பயமுறுத்தியிருக்கிறார்கள். வேதா யாருக்காக அரசாங்கத்தைக் குறை கூறுகிறார்? குறிப்பாகச் சொல்லப்போனால் அவர் இந்தியர்களுக்காக மட்டுமே பேசுகின்ற ஓர் அரசியல்வாதி. இந்தியர்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்ற எல்லா விஷயங்களுக்கும் அவர் குரல் கொடுக்கிறார். இந்தியர்கள் எக்கேடு கெட்டால் உங்களுக்கென்ன, நீங்கள் ஏன் அவர்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரோ அவர்கள் - அந்த அரசியல்வாதிகள் - தான் இதன் பின்னணியில் இருக்க வேண்டும்.  மலாய்க்காரர்களுக்கு இவரால் ஆகப் போவது ஒன்றுமில்லை!  சீனர்களுக்கும் ஆகப் போவது ஒன்றுமில்லை! ஆக, இதன் பின்னணியில் இந்திய அரசியல் கட்சிகளைத் தவிர வேறு யார் இருக்கப் போகிறார்கள்?

தேர்தல் காலங்களில் பொதுவாக இந்தியர்கள் குண்டர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகிறர்கள் என்பதை மறுக்க முடியாது. அதுவும் எதிர்கட்சியினருக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் ஆபத்துக்களை எதிர் நோக்குகிறார்கள்.  சென்ற தேர்தலின் போது எதிர்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்ட வயதான ஒரு சிறிய வியாபாரியை "உன்னை மோட்டார் சைக்கிளோடு வைத்து எரித்து விடுவோம்!" என்று அவரைப் பயமுறுத்தியதை நான் அறிவேன்.  இப்படிப் பலர் பயமுறுத்தப் படுகின்றனர். அரசியல் ரீதியில் கையாளாகதவர்கள் என்று இவர்களை நாம் நினைத்தாலும் குண்டர் கும்பல்களுக்குத் தகுதியானவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்!

வன்முறை நமக்கு வேண்டாம்! நமது குறைகளை காது கொடுத்துக் கேட்க எந்த அரசியல்வாதிகள் தயாரோ இருக்கிறார்களோ  அவர்களை நாம் ஆதரிப்போம்!


No comments:

Post a Comment