Thursday, 24 August 2017
துணைக் கல்வி அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்
துணைக் கல்வி அமைச்சர், ப.கமலநாதனுக்கு ஒரு வேண்டுகோள்.
இன்றைய நிலையில் தமிழ்க்கல்விக்கு முதல் எதிரி நீங்கள் எனலாம் அல்லது முதல் இடையூறும் நீங்கள் தான் எனலாம். உங்களின் பதவி என்பதே தமிழை சார்ந்த ஒரு பதவி. அந்தத் தமிழ்க்கல்வி இல்லை என்றால் நீங்களும் இல்லை. உங்களின் பதவி என்பதே மக்கள் போட்ட பிச்சை என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதுவும் குறிப்பாக, உங்களின் உயரத்திற்கு, இந்தியர்களின் பங்கு அதிகம்.
நீங்கள் பதவிக்கு வந்த பின்னர் உங்கள் தவறு என்ன என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டத்தான் செய்கின்றன.நல்லது நடக்கும் போது பாராட்டவும் செய்கின்றன. இது இப்படித்தான் நடக்க வேண்டும்.
ஆனால் நமது தாய் மொழி என்கின்ற போது நாங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்னும் அவசியமே இல்லை. யாரும் உங்களுக்கு புத்தி சொல்ல வேண்டும் என்னும் அவசியமும் இல்லை. காரணம் நீங்களும் தமிழர் தானே. தமிழ் படித்தவர் தானே. உங்களுக்கும் தமிழினம், தமிழ் மொழி என்று வரும் போது - அந்த இனப்பற்று, அந்த மொழிப்பற்று - என்பதெல்லாம் இயற்கையாக உண்டு என்று நாங்கள் நம்பினால் தவறில்லையே!
ஆனாலும் உங்களுக்கு அந்த இனப்பற்று, மொழிப்பற்று என்பது உண்டா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறதே. உங்களின் நடவடிக்கைகள் நமது இனத்திற்கும், நமது மொழிக்கும் பாதகத்தைத் தான் உண்டாக்குகின்றன என்பதை நாங்கள் சுட்டிக் காட்டத்தான் வேண்டுமா?
எங்களைப் போன்ற வாக்காளர்கள் தான் உங்களுக்கு எஜமானர்கள். எங்களுக்கும் எங்கள் மொழிக்கும் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் நீங்கள் தான் முன் நின்று எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் நீங்களோ கல்வி அமைச்சுக்கு உங்களின் எஜமான விசுவாசத்தைக் காட்டுவது சரியாக இல்லையே! அவர்களின் மூலம் உங்களுக்குச் சில ரொட்டித் துண்டுகள் கிடைக்கலாம். அதற்காக இனத் துரோகி என்று பெயர் எடுப்பது எவ்வளவு கேவலம் என்பதை உங்களின் முன்னாள் தலைவரின் இன்றைய நிலையை வைத்தே நீங்களே முடிவு செய்யலாம். மக்களை ஏமாற்றுபவர்கள், ஏமாற்றியவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை.
அந்த இனத் துரோகி என்னும் பட்டம் உங்களுக்கு வேண்டாம். மக்கள் சேவைக்காக வந்தீர்கள். அந்தச் சேவையை சிறப்பாகச் செய்யுங்கள். எங்களின் தாய்மொழியை - உங்களின் தாய்மொழியும் கூட - அந்த மொழியை ஒழிப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்கள். இன்றைய நிலையில் நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் என அறியும் போது மனம் வேதனை அடைகிறது.
இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வேண்டாமே என்பதே எங்களது வேண்டுகோள். வாழ்க தமிழ்! வாழ்க தமிழினம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment