Tuesday 8 August 2017

தொல்லைப் பேசி!


எல்லாக் காலங்களிலும்,  நமது நாட்டு "டெலிகம் மலேசியா" வை பொறுத்த வரையில் திருப்திகரமான தொலைப்பேசி       சேவையைக் கொடுத்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை! அப்போதும் சரி, இப்போதும் சரி, அதே நிலைமை தான். நல்ல வேலை, கைப்பேசிகள் வந்த பிறகு  அவர்களை மதிப்பார் யாருமில்லை!

என்னைப் போன்றோர் சிலர் இன்னும் அவர்களின் சேவையை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் முக்கியமாக வீட்டில் கணினி இருப்பதால் அவர்களின் சேவை எங்களுக்குத் தேவைப்படுகிறது. அத்தோடு மட்டும் அல்லாமல் கைப்பேசிகளைப் பாவிக்க அவசியம் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு ஏதோ ஓரிரு சமயங்களில் இந்தத் தொலைப்பேசிகளைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.

அதற்கும் ஒரு இடையூறு வந்து விட்டது. கடந்த ஒரு மாதமாக தொலைப்பேசி வேலை செய்யவில்லை! சரி புகார் செய்யலாமென்றால் அங்கே தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.  முன்பு,  நேரடியாகத் தொலைப்பெசியிலேயே கூப்பிட்டு புகார் செய்ய முடியும். இப்போது அப்படி எல்லாம் செய்ய முடிவதில்லை.  என்ன மொழி தெரியும் என்றெல்லாம் அவர்கள் கேட்பதில்லை.  ஆங்கிலமா? மலாய் மொழியா? சீனமா? என்கிறார்கள்!  தமிழ் மொழி அவர்கள் பட்டியலில் காணப்பட வில்லை! மற்ற மொழிகளில் பேசும் போது ஒரு சில வார்த்தைகள் விளங்குவதில்லை. அவை தொழில் நுட்பம் சார்ந்தவை. அதனால் தமிழில் பேசும் போது கொஞ்சம் அதிகமாகவே விளக்கம் கேட்கலாம். நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் தமிழ் பேசுபவர்களின் நலனுக்காக - நாட்டின்  முக்கிய மொழிகளில் ஒன்றான  தமிழ் மொழியிலும் விளக்கம் கொடுத்தால் நாமும் அவர்களின் சேவையைப் பயன் படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். இரு முறை மலாய் மொழியில் தொடர்பு கொண்டு புகார் செய்தும் எதுவும் நடக்கவில்லை. அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அவர்களைத் திட்டினாலும் 'அதுகளுக்கு' மண்டையில் எதுவும் ஏறப்போவதில்லை! ஆனால் மாதம் தவிறினாலும் அவர்களிடமிருந்து வரும் 'பில்' தவறுவதில்லை!

ஏதாவது கேட்டால் 'ஆள் பற்றாக்குறை' என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவார்கள்! நாட்டில் வேலை இல்லாதோர் கூடிக்கொண்டே போகிறார்கள். வங்காள தேசிகள் லட்சக்கணக்கில் நாட்டில் வாழுகின்றனர். ஆக, நாட்டில் வேலை இல்லாதோர் நிறையவே இருக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் ஆள் பற்றக்குறை என்று சொல்லிக் கொண்டிருப்பது நிர்வாகத்தில் உள்ள  கோளாறு என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அதைவிட முக்கியமானது முதலில் வேலை செய்பவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்!  டெலிகம் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பலர் காப்பிக்கடைகளில் உடகார்ந்து கொண்டு அரட்டை அடிப்பதை நாம் பார்க்கலாம்! அப்படி என்றால் அவர்களுக்குப் போதுமான வேலை இல்லையென்று தானே அர்த்தம்? போதுமான வேலை இல்லாத ஒரு நிறுவனம் நிறைய வேலையாட்களை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தால் அந்த நிறுவனத்தில் இப்படித்தான் வேலை நடக்கும்!

இந்த நிறுவனம் தனியார் மயம் என்று சொல்லி சும்மா சிலரிடம் தூக்கிக் கொடுத்தால் அவர்கள் என்ன செய்வார்களோ, அது தான் இப்போது      நடந்து கொண்டிருக்கிறது!

ஆக, நமது நாட்டின் தொலைப்பேசி சேவை மக்களிடமிருந்து தொலைந்து தொலைவே போய்க் கொண்டிருக்கிறது! 

இது தொலைப்பேசி சேவை அல்ல! தொல்லைப்பேசி சேவை!

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

No comments:

Post a Comment