Friday 11 August 2017

தீவிரவாதத்தின் தொடக்கம் எனலாமா?




மலேசியாவில் தீவிரவாதம் 'பளிச்' என கண்களுக்குத் தெரியாவிட்டாலும் தீவிரவாதத்துக்கான தொடக்கம் ஆங்காங்கே ஒருசில அறிகுறிகள் மூலம் நமக்குத் தெரிய வருகின்றன. அதுவும் பள்ளிகள் தீவிரவாததிற்கான ஆரம்ப மையமாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது நம்மால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.

ஏற்கனவே ஒரு தீவிரவாதி ஐ எஸ் ஐ எஸ் ஸோடு சேர்ந்து  ஈரானில் உயிர் விட்ட கதை நமக்குத் தெரியும். அதுவும் தாக்குதலில் அல்ல; தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்! ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மலேசியாவில் உள்ளவர்களால் தீவிரவாதிகளாக செயல்பட முடியாது என்பது தான் உண்மை. காரணம் அது போன்ற சூழலில் நாம் வாழவில்லை.

ஆனாலும் நமது பள்ளிகள் தீவிரவாதத்தைத் தூண்டி விடுகின்ற ஒரு மையமாக செயல்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமீபத்தில் ஒரு தொழிற்பள்ளியில் இந்தியர் ஒருவரால் நடத்தப்பட்ட ஓர் உணவகம் மூடப்பட்டது. ஏதேதோ காரணங்கள் சொன்னாலும் ஓர் இஸ்லாமியர் தான் உணவகம் நடத்த வேண்டும் என்பதே அந்தத் தொழிற்பள்ளியின் கொள்கை  என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி என்றால் இந்தியர் மீதான ஒரு வெறுப்பை பள்ளி நிர்வாகம் தூண்டி விடுவதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்! மற்ற இனத்தவர் மீது வெறுப்பை ஏற்படுத்துவது என்பது தீவிரவாதம் தான்!

இப்போது இன்னொரு பள்ளியில் சிற்றுண்டியகத்தில் முஸ்லிம்-முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பயன்படுத்த  தனித் தனியாக குவளைகள் வைத்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது! இது போன்ற கேவலமான ஒரு நடவடிக்கையை இதுவரை நாம் கண்டதில்லை; கேட்டதில்லை! தீவிரவாதத்திற்கான ஓர் அடித்தளம் அமைக்கப்படுகின்றது என்பதே உண்மை. இதனை ஏதோ 'தற்செயலாக' என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது! இவைகளெல்லாம் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்பது தான் உண்மை! இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது சம்பந்தப்பட்ட ஆசிரியர், புக்கிட் அமான், தீவிரவாதப் பிரிவனரால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே நமது 
வேண்டுகோள்.

எல்லாம் ஆங்காங்கே சிறிய, சிறிய அளவில் பயங்கரவாத விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதை புக்கிட் அமான் உணர வேண்டும்.

இதில் ஓர் ஆச்சரியமான செய்தி என்னவெனில் மக்களிடையே, மாணவர்களிடையே வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையையும் இவர்களே ஏற்படுத்திவிட்டு கடைசியில் தாய்மொழிப் பள்ளிகளின் மேல் குற்றாம் சொல்லுவது  இவர்களின் வாடிக்கையாகப் போய்விட்டது!

எது எப்படி இருப்பினும் தீவிரவாதத்தின் தொடக்கம் கண்ணுக்குத் தெரிகிறது. அது புக்கிட் அமானுக்கும் தெரிய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment