Sunday 27 August 2017

ஏழை மாணவர்கள், பணக்காரர்கள் ஆனார்கள்!


ஒரே நாளில் ஏழைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பணக்காரர்கள் ஆனார்கள்! இப்படி ஓர் அதிசயம் பேராக், பத்து காஜாவில் நடந்திருக்கிறது!

இன்று நாடு முழுவதும் எல்லாப் பள்ளிகளிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் அமலில் இருந்து வருகிறது.  அதில் பத்துகாஜா செங்காட் தமிழ்ப்பள்ளியும் அடங்கும்.இப்பள்ளியில் சுமார் 190 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இது நாள் வரை பயனடைந்து வந்த மாணவர்களில் சுமார் 90 மாணவர்களுக்கு இனி இலவச உணவு கிடையாது என்பதாக பேரா மாநிலக் கல்வி இலாகா அதிரடியாக                   முடிவெடுத்திருக்கிறது. அதாவது இந்த 90 மாணவர்களும் கோடிஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று மாநிலக் கல்வி இலாகா கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கையும் உடனடியாக எடுத்து விட்டது!

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று,  பேரா மாநிலக் கல்வி இலாகாவால் ரத்து செய்யப்பட்டிருக்கும் இந்த இலவச உணவு திட்டம் வேறு எந்த ஒரு மொழி பள்ளிக்கும் ரத்து செய்யப்படவில்லை என்பது தான். இந்த நடவடிக்கையின் மூலம் வேறு ஒன்றையும் நாம் பதிவு செய்யலாம். இந்த  பத்துகாஜா வட்டாரத்தில் ஏன் இந்த பேரா மாநிலத்தில், செங்காட் தமிழ்ப்பள்ளியில் மட்டும் தான் 90 கோடீஸ்வர குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்க வருகிறார்கள் என்பதாக நாமும் அறிகிறோம்! அந்தக் கோடீஸ்வரர்கள் யார் யார் எனத் தெரிந்து கொண்டால் பெற்றோர்களோ, அரசியல்வாதிகளோ மறியல், ஆர்ப்பாட்டம் என்னும் நிலைக்குப் போக மாட்டார்கள்!

ஒன்று நமக்குப் புரிகிறது. கல்வி அமைச்சும், மாநிலக் கல்வி இலாகாக்களும் தமிழ்ப்பள்ளிகளில் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பிரச்சனைகள ஏற்படுத்துவதே தங்களது வேலை என்பதாக நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அல்லது கல்வி அமைச்சிலும், கல்வி இலாக்காகளிலும் தேவைக்கு மேல் அங்கு வேலை செய்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. வேலை செய்ய ஒன்றும் இல்லை என்றால் உடனே எந்தத் தமிழ்ப்பள்ளியில் என்ன பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்று தேவையற்ற ஒரு சூழலை ஏற்படுத்துகிறார்கள்! இதையே தேசியப்பள்ளிகளிலோ, சீனப்பள்ளிகளிலோ அவர்களால் காட்ட முடிவதில்லை! காரணம் அந்த அளவுக்கு அவர்களுக்குத் துணிவில்லை!

தமிழ்ப்பள்ளிகளில் காட்டிக் கொடுக்கும் புத்தி நமக்கு இருப்பதால் கொஞ்சம் கூட அறிவில்லாதவன் எல்லாம் நம்மீது கை வைக்கிறான்! அறிவுள்ளவர்களாக நாம் இருக்க வேண்டுமே தவிர அறிவில்லாதவர்களோடு கூட்டு சேரக்கூடாது என்பதே இது போன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன.

நம்மை நாமே திருத்திக் கொள்ளாதவரை எல்லாக் கூத்துக்களும் நடந்து கொண்டு தான் இருக்கும்! அது வரை அரசியல்வாதிகளிடம் தான் நாம் கூஜா தூக்க வேண்டும்!




No comments:

Post a Comment