Tuesday 22 August 2017

மலாக்க முத்துக்கிருஷ்ணன் தாக்கப்பட்டார்


காலையில் இணையத்தளத்தில் படித்த முதல் செய்தியே "மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அராஜகமாகத் தாக்கப்பட்டார்" என்னும் செம்பருத்தி இதழில் வெளியான செய்திதான். மிகவும் அதிர்ச்சியான செய்தி; அதிர்ந்து போனேன்.


நான் வாங்கும் ஒரு தமிழ்ப்பத்திரிக்கையை பார்த்தேன். இந்தச் செய்தியே வரவில்லை! அங்கும் ஒரு அரசியல்!

நண்பர் முத்துக்கிருஷ்ணனின் இணைய தளத்தை அடிக்கடி வலம் வருபவன் நான்.  அவரது இணைய தளத்தில் பல அரிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. நிறைய ஆராய்ச்சிகள் செய்து எழுதுபவர். பல சரித்திரத் தகவல்களை அங்கிருந்து தான் நாம் பெற வேண்டும். அந்த அளவுக்கு ஆராய்ச்சிகள் செய்திருப்பவர்; செய்கின்றவர். இதெல்லாம் சாதாரண வேலையல்ல. அதற்குக் கடும் உழைப்பு வேண்டும். இந்த வயதிலும் (69 வயது) அவரின் உழைப்பு நம்மை வியக்க வைக்கிறது.

தமிழ் மலரில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காக அவர் தாக்கப்பட்டார் என்பதாக செய்திகள் கூறுகின்றன.  அந்தச் செய்திகள் அனைத்தும் அரசாங்கத்தைத் தாக்கி ஏழுதப்படுகின்ற செய்திகள் எனக் கூறப்பட்டாலும் ம.இ.கா. வினரே இதற்குக் காரணமானவர்கள் என்பதாகக் கருதப்படுகின்றது.  காரணம் ஒரு தமிழ்ப் பத்திரிக்கையாளனைத் தாக்குவதற்கு ஒரு அம்னோ, ம.சீ.ச. போன்ற கட்சிகளிலிருந்து யாரும் வரப்போவதில்லை! அது ம.இ.கா. தான். தேர்தல் நெருங்குகிற காலத்தில் ம.இ.கா.வினர் தங்களின் மூளையைப் பலப்படுத்தாமல் தங்களது முஷ்டியைப் பயன் படுத்துகின்றனர்!

ஏன் இந்த நிலை? ஒன்றுமில்லை!  நாங்கள் தான் இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதுமா? தங்களுடைய சேவைகளில் அதனைக் காட்ட வேண்டாமா! சேவை தேவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தேவை இல்லை என்று மக்களும் நினைக்கலாம் அல்லவா! அது தான் நடந்து கொண்டிருக்கிறது! சேவை என்று சொல்ல அவர்களிடம் ஒன்றுமில்லை. வெறும் அறிக்கைகளும் இந்தியர்களை மேம்படுத்த பெரிய பெரிய திட்டங்களும் வெற்று அறிக்கைகளாகவே இருக்கின்றனவே தவிர இவைகள் நடப்புக்கு வரும் என்பதற்கு எந்த உறுதிமொழியும்  இல்லை!

இந்த நிலையில் ம.இ.கா.வினர் தங்களது இளைஞர் பகுதியை குண்டர்களாக புத்தாக்கம் செய்திருக்கின்றனர். சமீபத்தில் ஹின்ராஃ தலைவர் வேதமூர்த்தியை அலுவலகம் புகுந்து தாக்கியிருக்கின்றனர். இப்போது ஒரு பத்திரிக்கையாளரான முத்துக்கிருஷ்ணன் தாக்கப்பட்டிருக்கிறார். அதுவும் ஒர் உணவகத்தில்; நாலு பேர் கூடும் இடத்தில். அப்படி என்றால் காவல்துறை அவர்களுக்குத் துணை நிற்கிறது என்னும்  துணிச்சலும் இருக்கலாம் அல்லவா!

உண்மையாளர்களைத் தாக்கலாம்! ஆனால் நீங்கள் தகர்க்கப்படுவீர்கள் என்பதும் உண்மை!


No comments:

Post a Comment