Tuesday 29 August 2017

அரசியல்வாதிகளுக்கு இனி அயலகம் தான்!


அரசியவாதிகளை நினைக்கும் போது நமக்கு இயற்கையாகவே கோபமும் ஆத்திரமும் வரத்தான் செய்கிறது. நான் நல்ல, உண்மையான அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை. கொலைகாரன், கொள்ளைக்காரன், குண்டர் கும்பல் தலைவன் -இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து பண்ணுகின்ற அராஜகங்களும், அயோக்கியத்தனங்களும், உண்மையைச் சொன்னால், நமக்கும் கொலை வெறியை ஏற்படுத்துகின்றன!

இப்படி அநியாயங்கள் செய்கின்றவர்கள் தங்களது கடைசி காலத்தை  எப்படித்தான் எதிர் நோக்குவார்கள்? இந்தக் கொலைகார கும்பல்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லாததால் இவர்கள் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எப்படியும் வாழ்வார்கள்! ஆனாலும் நிம்மதியற்ற வாழ்க்கை! ஓடி ஒளிந்து வாழ்கின்ற வாழ்க்கை! சக மனிதனிடம்  மரியாதை கிடைக்காத வாழ்க்கை!

கடைசியாக இப்படி ஒரு நிலைக்கு ஆளானவர் நமது பக்கத்து நாடான தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா. 



ஊழல் வழக்கில் பத்து ஆண்டு சிறைத் தண்டனையை எதிர் நோக்கிய யிங்லக்,  நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் முன்னரே நாட்டை விட்டு தப்பிவிட்டார்! அவர் துபாய்க்குத் தப்பிவிட்டதாகக்  கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் இவரது சகோதரரும் துபாயில் தலமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

ஆக, எவ்வளவு தான் கோடிக் கோடியாகக் கொள்ளையடித்து குவித்தாலும் அந்தக் கோடிகளோடு தலைமறைவு வாழ்க்கை தான் இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். அரசியல் கொள்ளை என்பது பொதுமக்களைக் கொள்ளையடிப்பது தான். நாட்டின் வளப்பத்திற்காக, மக்களின் உயர்வுக்காக பயன்படுத்த வேண்டிய பணம் இப்படி நாட்டை ஆள வந்தவர்கள் தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்துவது என்பது கொள்ளையிலும் மகா கொள்ளை!

நம்மைப் பொறுத்தவரை, மலேசியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி மக்களைக் கொள்ளையடித்து குபேரனானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.  இவர்களில் எத்தனை பேர் நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றனர்?  வெளி நாடுகளில் சொத்துக்களை வாங்கிப் போட்டிருக்கிறர்கள். எவனோ அனுபவிக்கிறான்.  அகப்பட்டுக் கொள்வோம் என்று நினைத்தவன் வெளி நாட்டைத் தாயகமாக ஆக்கிக் கொண்டான்!  ஒளிவு மறைவு வாழ்க்கை!  எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற பய உணர்வு!  ஒரு சராசரியாக அவன் இருந்த போது உள்ள அந்த நிம்மதியை - இப்போது கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தும் - அவனால் பெற முடியவில்லை! அவனது பிள்ளைகள் என்ன குணக்குன்றுகளாகவா இருக்கிறார்கள்?  அத்தனையும் குப்பை மேடுகள்!   கொஞ்சம் ஏமாந்தால்  வேலைக்காரியே கொன்று விடுவாள்! உன்னால் எனக்கு எதுவும் ஆகவில்லை என்று மகன் நினைத்தால் அவனே அப்பனுக்குக் கொள்ளி வைத்து விடுவான்! வஞ்சனையோடு பணம் சேர்த்த அவனுக்கு,  அவனைச் சுற்றியே ஒரு வஞ்சனைக் கூட்டம் சூழ்ந்து கொண்டே இருக்கும்!  

தனது சொந்த நாட்டிலும் அவன் ஒரு அயலானாகவே வாழ்வான்! வெளி நாடாக இருந்தால் அங்கும் யாரும் மதிக்காத ஒரு அயலானகத்தான் வாழ வேண்டி வரும்!

அவனுக்கு அயலகம் தான் நிரந்தரம்!                                                                                                                                                                                                                     

No comments:

Post a Comment