நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை! பிரதமர் துறையைச் சார்ந்த அமைச்சர் பி. வேதமூர்த்தி கொடுத்திருக்கின்ற அறிவிப்பைப் பார்த்து நாம் அதிர்ச்சி அடையவில்லை; வியப்படையவில்லை.
அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசாங்கம் சுமார் நானுறு கோடி வெள்ளியை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர்கூறியிருக்கிறார்.
இது வழக்கம் போல ஒரு அறிவிப்புத் தானா என்று நாம் நினைக்க வாய்ப்புண்டு! தவறில்லையே! ஏற்கனவே இது போன்ற அறிவிப்புக்களைச் செய்து தானைத் தலைவர் துன் சாமிவேலு எங்களிடையே பிரபலம் ஆகி விட்டார்! அவர் ஏற்கனவே எங்களுக்குக் காது குத்தி, மூக்குத்திப் போட்டு, சடைப்பின்னி, கொண்டை போட்டு - எல்லாமே அவர் செய்து எங்களை உயர்த்தி விட்டார்! அதனால் தான் பத்து ஆண்டுகள் என்றாலே மனதிலே கிலி பிடித்துக் கொள்ளுகிறது!
இப்போது வேதமூர்த்தி இது போன்ற அறிவுப்புக்களைச் செய்வது புதிதாக ஒன்றும் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கை கூட்டணி மேல் எங்களுக்கு உள்ள நம்பிக்கையால் அதனை நம்புகிறோம் சில கருத்து வேறுபாடுகளோடு.
நீங்கள் பத்து ஆண்டுகள் என்று போடுகின்ற கணக்கு தவறு என்று சொல்ல வரவில்லை. பத்து ஆண்டுகள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் நாற்பது கோடி பக்காத்தான் அரசாங்கம் இந்தியர்களின் முன்னேற்றத்திற்குச் செலவு செய்யத் தயாராக இருக்கிறது என்று தான் பொருள். ஒரு வேளை தேவை ஏற்பட்டால் அதற்கு மேலும், கூடுதலாகவும் செலவு செய்யலாம். ஆனால் எங்களது தேவை எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் நாற்பது கோடிகளைச் செலவு செய்த பின்னர் ஏற்பட்ட அடைவு நில என்ன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். வெறும் அறிவிப்புக்கள் எங்களை உயர்த்தி விடாது. அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதை இந்தச் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சமூகம் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது. கேள்விகள் கேட்டாலே குண்டர் கும்பல்களை வைத்து அடித்து உதைக்கும் தலைவர்களைக் கொண்டிருந்த சமூகம் இது! இப்போதும் கூட எதுவும் கெட்டுவிடவில்லை. இப்போது உள்ளவர்களும் அந்த குண்டர் கும்பல் வேலைகளைச் செய்தாலும் ஒன்றும் தலைகீழ் மாற்றம் நடந்துவிடப் போவதில்லை. ஆனாலும் சமூகம் இப்போது விழித்துக் கொண்டது. கேள்விகள் கேட்கவும் தயார். அடித்தால் பதிலடி கொடுக்கவும் தயார் என்னும் எல்லைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
அதனால் ஆளும் வர்க்கத்தினர் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சும்மா அறிவிப்புக்களைச் செய்துவிட்டு சங்கு ஊதிக் கொண்டிருக்க வேண்டாம். எங்களுக்கு உங்களுடைய அறிக்கைகள் தேவை. மாதாந்திர அறிக்கையோ, ஆண்டு அறிக்கையோ மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பத்து ஆண்டாக இருந்தாலும் சரி, அடுத்த பத்து மாதத்தில் உங்களுடைய பத்து மாத அறிக்கை எங்களுக்குத் தேவை. நீங்கள் சேவை செய்ய வந்தவர்களா அல்லது சலாம் போட வந்தவர்களா என்பதை அறிய பத்து மாதங்கள் போதும்.
உங்களது அறிக்கைகளுக்காகக் காத்துக் கிடக்கிறோம்!
No comments:
Post a Comment