Monday 27 August 2018

குட்டையைக் குழப்புகிறார்கள்...!

இந்தியர்களின் அடையாள அட்டைப் பிரச்சனையில் குட்டையைக் குழப்புகின்ற ஒரு நிலைமையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். யார் உண்மையைச் சொல்லுகிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லை!

ஒரு காலக்கட்டத்தில் இந்தியர்கள் 300,000 இலட்சம் பேர் நாடற்றவர்கள் என்று சொன்ன எதிர்க்கட்சிகள் இன்று பதவியில் இருக்கும் போது வேறு மாதிரி சொல்லுகிறார்கள். அவர்களை நாம் குற்றம் சொல்லவில்லை. காரணம் எதிரணியில் இருக்கும் போது "அள்ளி" விடுவதெல்லாம் சாதாரணம்! ஆனாலும் அவர்களும் ஒரு கணக்கெடுப்பை எடுத்தார்கள். அவர்களுக்கும் சில தகவல்கள் கிடைத்திருக்கும்.  அவர்கள் எடுத்த கணக்கின்படி அது ஆயிரமா அல்லது இலட்சமா என்று நமக்குத் தெரியவில்லை! 

ம.இ.கா. காரர்களை நாம் என்றுமே நம்புவதில்லை!  இப்போதும்  அப்படித்தான்! ம.இ.கா.வினர் அப்போது சொன்னது சரிதான் என்றால் அவர்கள் ஏன் அப்போதே அந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை  என்னும் கேள்வி எழுகிறது. அவர்கள் அந்தப் பிரச்சனைக்கு அப்போது முடிவு கண்டிருந்தால் இந்த நாடற்றவர்கள் பிரச்சனையே எழுந்திருக்காதே! இப்போதும் கூட நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை! இன்றைய அரசாங்கமும் ஏதேனும் தில்லுமுள்ளுகள் புரிகின்றதா என்று சந்தேகக்கண் கொண்டுதான் பார்க்க வேண்டியுள்ளது!

இருந்தாலும் அரசாங்கம் கொடுத்த புள்ளி விபரங்களை நம்புகிறோம். இப்போது அரசாங்கம் கொடுத்த புள்ளிவிபரம் அரசாங்கத்திடம் 3853 விண்ணப்பங்கள் அவர்களின் கைவசம் இருக்கின்றன. ஏற்கனவே அறுபது வயதிற்கு மேற்பட்டோர் சுமார் 3407 பேர் வெகு விரைவில் அடையாள அட்டைகளைப் பெற விருக்கின்றனர்.  அது 100 நாள் சாதனை! வாழ்த்துகள்!  அநேகமாக அடுத்து நூறு நாள்களுக்குள் இந்த 3853 பேருடைய பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.

இந்தப் பிரச்சனையை ஆண்டு கணக்கில் இழுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம். அடையாள அட்டை, குடியுரிமை இல்லை, பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியவில்லை போன்ற "இல்லை! இல்லை!" என்கிற பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும்.  300,000 இலட்சம் என்னும் போது அது நீண்ட காலப் பிரச்சனை. ஆனால் இப்போதைய நிலையில் இது ஒரு சில மாதங்கள் பிரச்சனை.  

இப்போது கொடுக்கப்பட்ட புள்ளி விபரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 60 வயதுக்குக் கீழ்பட்டவர்கள்.  இவர்களில் பெரும்பாலும் தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்கள். அதனால் உடனடியாக அரசாங்கம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். மேலும் மேலும் நாள்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருப்பது எந்த வகையிலும்  நாட்டுக்கு நல்லதல்ல.

குட்டையைக் குழப்ப வேண்டாம்! குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்க வேண்டாம்! அது தான் நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment