Tuesday, 21 August 2018

தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

முஸ்லிம் நண்பர்களுக்கு எனது இனிய தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

தமிழ் முஸ்லிம் நண்பர்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. தமிழரிடையே இரண்டு சமுகத்தினர் மீது அதிகம் பற்றும் பாசமும் உண்டு. அவர்கள் தான் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ் முஸ்லிம்களும், செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்களும். இந்த இரண்டு சமூகத்தைச் சார்ந்த தமிழர்கள் தான் எல்லாக் காலங்களிலும் "நாங்கள் தொழிலதிபர்கள்" என்று நெஞ்சை  நிமிர்த்தி நிற்பவர்கள். 

என்னுடைய முஸ்லிம் நண்பர் ஒருவர் எத்தனையோ  வேலைகள் அவருக்காக காத்து நிற்க, அவரோ "நான் எவனிடமும் வேலை செய்ய மாட்டேன்!" என்று கிடைத்த வேலைகளை உதறித் தள்ளிவிட்டு அஞ்சடியில் துணியை விரித்துப் போட்டு சிறு சிறு பொருட்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரே பிற்காலத்தில் ஒரு கடையைத் திறந்து வியாபாரம் செய்து பெரிய அளவில் வளர்ந்து விட்டார். அவருடைய துணிச்சலைப் பார்த்து வியந்ததுண்டு.

ஒரு சிறிய ஒட்டுக்கடையில் பத்திரிக்கைகள் விற்று வந்த நண்பர் ஒருவர். என் பள்ளி நாட்களில் அவரிடம் தான் "கல்கண்டு" வார இதழை வாங்குவேன்.  ரொம்பவும் பழக்கம். பிற்காலத்தில்  அவரே ஒரு உணவகத்தை நடத்தினார்.  அதனையே இரண்டு உணவகங்களாக மாற்றினார். அப்போதும் நான் அவருடைய வாடிக்கையாளர்!

நண்பர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய மூலதனங்களோடு அவர்கள் இந்தத் தொழில்களுக்குப் போகவில்லை. அப்போது நமது செட்டியார்கள் தான் இவர்களுக்கு வங்கிகளாக இருந்து உதவினார்கள்.

ஒரு முறை உணவகத்தில் வேலை செய்யும் நண்பரிடம் "எவ்வளவு காலத்திற்குத் தான் இப்படி டீ போடுகிற வேலை செய்யப் போகிறீர்கள்?  சொந்தமாக எப்போது கடைப் போடப் போகிறீர்கள்?"  என்று  தமாஷாக சொல்லி வைத்தேன். அவர் அதனை சீரியசாக எடுத்துக் கொண்டு கணவனும் மனைவியும் ஒரு சிறிய உணவகத்தை ஆரம்பித்து விட்டார்கள்!   பிறகு அதனையே பெரிய உணவகமாக மாற்றி விட்டார்கள். இப்போது அது அவர்களின் சொந்த உணவகமாக மாறி விட்டது!

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் அவர்களிடம் துணிச்சலுக்குக் குறைவில்லை. தொழில் என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறி விட்டது. கீழே விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுகின்ற அந்தப் போர்க்குணம் எனக்குப் பிடித்தமான ஒன்று! அந்தக் குணம் தான் நமக்கு வேண்டும்!

இந்தத் தியாகத் திருநாளில் எல்லா முஸ்லிம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.  நீங்கள் இன்னும் பல சிறப்புக்களைப் பெற வேண்டும். வளமாக வாழ வேண்டும். இந்தத் தமிழினத்தின் புகழை பார் அறிய செய்ய வேண்டும்.

மீண்டும் வாழ்த்துகள்!
 

No comments:

Post a Comment