பக்காத்தான் தனது 14-வது பொதுத் தேர்தலின் போது கொடுத்த நூறு நாள் தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று?
அந்த வாக்குறுதிகள் வெற்றியில் முடிந்ததா அல்லது தோல்வியில் முடிந்ததா என்பதான வாதங்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.
இது தேர்தல் வாக்குறுதிகள். தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுவது சாதாரணமான ஒன்று தான். ஊழல் செய்பவனே ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லுவதெல்லாம் வாடிக்கை தான்.
ஆனாலும் பக்காத்தான் கொடுத்த வாக்குறுதிகளை அப்படியெல்லாம் பார்க்க முடியாது. மேலும் நமது நாட்டில் இந்தத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளைப் போல இதற்கு முன்னர் கொடுக்கப்படவில்லை. பெரிய, பெரிய வாக்குறுதிகள் இல்லை. பொதுவாக, இந்தியர்களைப் பொறுத்தவரை, இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி அங்கு ஒரு தமிழ்ப்பள்ளி, போன்ற வாக்குறுதிகள் தான் இருக்கும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள். இது தான் கடந்த தேர்தல்களில் பாரிசான் கொடுத்த வாக்குறுதிகள். அதனை நாம் பெரிதுபடுத்தவில்லை. காரணம் அது நடக்காது என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் இந்த முறை தேர்தல் என்பதே வேறு கோணத்தில். உண்மையாகவே மலேசியர்கள் பாதிக்கப்பட்டார்கள். விலைவாசி ஏற்றம், பொருளாதாரச் சிக்கல்கள், இந்தியர்களைப் பொறுத்தவரை அடையாள அட்டை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியில் வேற்றுமை - இப்படிப் பிரச்சனைகள் ஏராளம்! ஏராளம்! அதனால் தான் எதிர்கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்க வேண்டிய சூழலில் இருந்தார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அன்றைய நிலையில், அவர்களுக்குக் கிடைத்த தரவுகளை வைத்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள். முடியுமா, முடியாதா என்றெல்லாம் கணிக்க முடியாத நிலை! ஆனால் எதிர்கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை!
எதிர்பாராத சூழலில் எதிர்கட்சியினர் வெற்றிபெற்றார்கள்! ஆக, அப்போது அவர்கள் கொடுத்த நூறு நாள் வாக்குறுதிகளை இப்போது அவர்களால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. ஏதோ ஒரு சில முடிந்ததை அவசரக் கோலத்தோடு செய்தார்கள், செய்கின்றார்கள் என்பதோடு சரி. அத்தோடு நாமும் திருப்தி அடைய வேண்டியது தான்!
ஆனால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றுவார்கள் என்பது மட்டும் உறுதி. சில வருடங்கள் எடுக்கலாம். சில இழுத்துக் கொண்டும் போகலாம்! ஆனால் நிச்சயம் செய்வார்கள்!
வெற்றியா? தோல்வியா? வெற்றி கிடைக்கும் என நம்புவோம்!
No comments:
Post a Comment