காலைப் பொழுதில் என்ன வேண்டும்? வேலை செய்பவர்கள் அதிகரிகளுக்கோ, நண்பர்களுக்கோ ஒரு "காலை வணக்கம்!" போடுவது இயல்பான ஒன்று. அதிலே ஒரு மகிழ்ச்சி. புத்துணர்ச்சியை ஏற்படுவது காலை வணக்கம்!
இன்று காலை நான் காரை விட்டு இறங்கும் போதே ஒரு காலை வணக்கம் கிடைத்தது. அதிசயத்துப் போனேன். குப்பை லோரியில் குப்பை அள்ளும் பங்களாதேசி நண்பர் ஒருவர்: "அபாங்! கூட் மார்னிங்!" என்று சொல்லி அசத்தி விட்டார்! அவரை யார் என்று எனக்குத் தெரியாது! நான் யார் என்று அவருக்குத் தெரியாது! இருந்தாலும் ஏனோ அந்த காலை நேரத்து "கூட் மார்னிங்" மனதுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்தது!
இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நான் எப்போதும் போலவே மகிழ்ச்சியானவன் தான். ஆனால் அந்தக் குப்பைகளை அள்ளுகின்ற அந்த வங்காள தேசியின் நிலை என்ன? காலையிலேயே அந்தக் குப்பைகளை அள்ளிக் கொண்டு, அந்த நாற்றத்தோடு நாற்றமாக நாற்றமாகிப் போய் இன்னும் சில மணி நேரங்கள் நாற்றோத்தோடு நாற்றுமாய் வேலைக்ளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கப் போகும் அவன் என்ன மகிழ்ச்சியைக் காணப் போகிறான்? இருந்தாலும் அவனைப் பாராட்டத் தான் வேண்டும். அந்த நாற்றத்திலும் "நான் மகிழ்ச்சியாய் இருப்பேன்!" என்று சந்தோஷமாக தனது பணியைச் செய்யும் அவனை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது!
ஆமாம், நாம் செய்கின்ற பணி, அது நம்முடையது. சிறிதோ, பெரிதோ ஒன்றுமில்லை. அவனவன் தகுதிக்கு ஏற்ப நமது பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு என்று சில பொறுப்புக்கள் இருக்கின்றன. நமது வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது ஒரு பணியைச் செய்து தான் ஆக வேண்டும்.
அதுவும் அவன் வெளி நாட்டவன். அவனை நம்பி அவனது குடும்பம் அவனது நாட்டில் காத்துக் கொண்டிருக்கிறது. அப்பா, அம்மா, மனைவி பிள்ளைகள், அண்ணன் தம்பி எல்லாரும் அவனை நம்பி, அவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வறுமையைப் போக்க வேண்டும். அதனால் ஏதோ ஒரு வேலை அவனுக்குத் தேவை. கௌரவம் பார்க்க முடியாது. அதனால் செய்கின்ற வேலை எதுவாக இருந்தாலும் செய்கின்ற வேலையில் மகிழ்ச்சி அடைவோம்.
அந்த மனப்பான்மை தான் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நான் ஒழுங்காக செய்ய வேண்டும். வேலை செய்யும் போது மகிழ்ச்சியாக நாம் இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியைத் தான் அந்த வங்காளதேசி காலை நேரத்தில் "காலை வணக்கம்" என்று சொல்லுவது மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்.
உங்கள் அனைவருக்கும் "காலை வணக்கம்!" வாழ்த்துகள்!
No comments:
Post a Comment