Thursday 30 August 2018

யார் தான் பொறுப்பு...?

நாடற்றவர்கள், குடியுரிமை பற்றியெல்லாம் பேசும் போது ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு விதமான புள்ளி விபரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. எது சரியென்று நமக்குத் தெரியவில்லை. இது அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமே தெரிந்திருக்கிற ரகசியங்கள். ரகசியங்கள் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இந்த ரகசியங்களைப் பூட்டி கையில் சாவியை வைத்திருப்பவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள். அவர்கள் 99% விழுக்காடு மலாய்க்காரர்கள்.  அதுவும் முன்னாள் அரசாங்கத்தின் விசுவாசிகள். ஏற்கனவே அவர்களிடம் உள்ள அந்த அதிகாரத் துஷ்பிரயோகத்தை தொடர வேண்டும் என நினைப்பவர்கள். முதலில் இவர்களைக் களை  எடுக்க வேண்டும்.  அதன் பின்னர் தான் அரசு இயந்திரம் சரியாக இயங்க முடியும்.

ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. மற்றவர்கள்  எல்லாம் சொன்ன புள்ளிவிபரங்களைக் காணும் போது பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி சொன்னது மட்டும் தான் சரியானதாகத் தோன்றுகிறது. அவரே பல ஆண்டுகளாக அதனைப் பின் தொடர்ந்து வருபவர் என்பதும் புலனாகிறது.

அவர் சொன்ன ஒரு கருத்து: இந்த மக்களின் துயரத்தை தணிக்கவும் உரிய வழிமுறை குறித்து உள்துறை அமைச்சுடன் தமது அமைச்சு தற்பொழுது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்பதாக அவர் கூறியிருக்கிறார். 

வரவேற்கிறோம். இந்த அடையாள அட்டை, குடியுரிமை யார்,  எந்த அமைச்சு அல்லது எந்த இந்திய அமைச்சர்  பொறுப்பேற்றிருக்கிறார் என்று தெரியாத நிலையில் இப்போது அமைச்சர் வேதமூர்த்தியே இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தனது அமைச்சின்  கீழ் வருவதாக அவரே அறிவித்துவிட்டார். 

இனி ஆள் ஆளுக்கு இது குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை. அவருடைய அமைச்சே அதனைக் கையாளட்டும். கேள்விகளுக்கு அவரே பதில் சொல்லட்டும். 

வேதமூர்த்தி அவர்களைப் பற்றி நாம் ஐயமுற ஒன்றுமில்லை. அவர் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்கும் மனிதர் அல்ல. ஹின்ராப் போராட்டம் நாம் அறிந்தது தான்.   இந்தச் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை  ஏற்படுத்திய  ஓர் இயக்கம். அவர் ஒரு போராளி. இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்யும் நோக்கம் உள்ளவர்.

நாடற்றவர்கள், குடியுரிமை இல்லாதவர்கள், அடையாள அட்டை கிடைக்காதவர்கள் - அது எதுவாக இருந்தாலும் இப்போது அவைகள் அனைத்தும் வேதமூர்த்தியின் அமைச்சின் கீழ் வருவதில் நமக்கும் மகிழ்ச்சியே! 

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment