பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசமி திடீரென கட்சி மாறுவது சரியா என்று கேட்கத் தோன்றுகிறது.
தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் அரசாங்கப்பள்ளிகளாக மாற வேண்டும் என்னும் கோரிக்கை சமீபத்தில் எழுப்பப்பட்டதல்ல. நீண்ட காலமாக எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக நடப்பில் உள்ள ஒரு கோரிக்கை. எதிர் வரிசையில் இருக்கும் போது, ம.இ.கா. வினரைத் தவிர மற்ற அனைவரும் ஒரே குரலாக அந்தக் கோரிக்கையை ஆதரித்தனர். பேராசிரியரும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏன் கடந்த பதினான்காவது பொதுத் தேர்தலில் அதுவும் முக்கிய அம்சமாக விளங்கியது.
ஆனாலும் பேராசிரியர் இப்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டார் என்றே தோன்றுகிறது. பகுதி உதவி பெறும் பள்ளிகள் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாறினால் தமிழ்ப்பள்ளிகள் தங்களது தனித்தன்மையை இழந்து விடும் என்பதாக அவர் கூறுகிறார்!
ஏன் இத்தனை ஆண்டுகளாக ஏற்றுக்கொண்ட ஒன்றை இப்போது தங்களுடைய ஆட்சி அமைந்த பிறகு தடம் மாறுவதற்குக் காரணங்கள் என்ன என்பது நமக்கும் புரியாத புதிராக இருக்கிறது!
பேராசிரியர் ஏதேனும் நெருக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறாரா? அவர் சொல்லுகின்ற சில காரணங்களைப் பார்ப்போம். தமிழ்ப்பள்ளிகள் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாறினால்: தமிழ் மொழி தெரியாதவர்கள் தலைமையாசிரியர்களாக வரலாம். தமிழ் தெரியாதவர்கள் ஆசிரியர்களாக வரலாம். பதவி உயர்வு பெறத் தடையாக இருக்கலாம் என்பன போன்ற காரணங்கள்.
மேற் சொல்லப்பட்ட காரணங்கள் பாரிசான் கட்சி ஆட்சியில் இருக்கும் போதே வந்துவிட்டவைகள் தான். ஒன்றும் புதிதல்ல. அதனை ஏன் பேராசிரியர் நமக்கு ஞாபகமூட்டுகிறார் என்று தெரியவில்லை.
இவைகள் எல்லாம் களையப்பட வேண்டும் எனபதற்காகத்தான் நாம் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். அதன் எதிரொலி தான் இப்போதைய புதிய ஆட்சி. இப்போதும் ஏன் அதனையே காரணங்களாகக் கூற வேண்டும் என்பது தான் நமது கேள்வி
இந்த ஆட்சியில் மேலே குறிப்பிட்ட அனைத்தும் களையப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் வேளையில் மீண்டும்" நாங்கள் அங்கேயே தான் நிற்கிறோம், நாங்கள் மாறவில்லை" என்பது போல் இருக்கிறது பேராசிரியர் கூறுவது!
சீனர்கள் தங்களுக்கு ஏற்றவாறு சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் வேளையில் பேராசிரியர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லுவது ஏற்புடையதல்ல. தமிழை சரியான பாதையில் கொண்டு செல்ல அவருடைய கருத்து நமக்குத் தேவை.
பேராசிரியர் சொல்லுவது சரியா? சரியில்லை என்பதே நமது நிலை!
No comments:
Post a Comment