Sunday 19 August 2018

அறப்பணி வாரியம் தேவையா..?

இந்து அறப்பணி வாரியம் அமைப்பதற்கான வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 

இது தேவையா, தேவையில்லையா என்கிற விவாதமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டில் உள்ள பல இந்து கோவில்கள் பலவிதமான பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றன என்பது உண்மை. அதில் முக்கியமாக தலைமைத்துவ பிரச்சனை. பல கோவில் நிர்வாகிகள் நீதிமன்றங்களைப் படை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்!  ஒன்று அல்ல! இரண்டு அல்ல!  பல! பல!

இன்னொரு பக்கம் பார்ப்போம். நாட்டில் செட்டியார்கள் வழி நடத்தும்  கோவில்கள் பல இருக்கின்றன. அவர்கள் எல்லாம்  நீதிமன்ற வாசல்களை மிதிப்பது மிக மிகக் குறைவு. சரி, யாழ்ப்பாணத்  தமிழர்களின் கோவில்களைப் பார்ப்போம். அங்கும் எந்த ஆர்ப்பட்டமோ ஆரவாரமோ ஒன்றும் இல்லை. எல்லாமே சுமுகமாக போய்க் கொண்டிருக்கிறது.

செட்டியார்கள், யாழ்ப்பாணத் தமிழர்களத் தவிர்த்து மற்ற கோவில்கள் மட்டுமே பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றன. ஏன்?  தமிழர்களை அதிகமாகக் கொண்ட இந்தக் கோவில்களின் தான் மலையாளிகள், தெலுங்கர்கள் அனைவரும் தமிழர்களாகி விடுகின்றனர்!  அது கூட குற்றமில்லை.  கோவில்களின் தலைமைத்துவம் இவர்கள் கையில். அது தான் பிரச்சனைகளின் ஆரம்பம். அவர்கள் மற்றவர்களுக்கு - தமிழர்களுக்கு - விட்டுக் கொடுப்பதில்லை. ஒருவர் போனால் அவருடைய வாரிசை உள்ளே நுழைத்து விடுகிறார்! அல்லது சொந்தங்களை நுழைய விடுகிறார்கள்!   இவைகள் எல்லாம் அளவுக்கு மீறிய சொத்துக்கள் உள்ள கோயில்களில் தான் பிரச்சனைகள் எழுகின்றன! பத்துமலை திருத்தலத்தின் தலைவரை யாராலும் அசைக்க முடியவில்லை அல்லவா!

அதனால் பிரச்சனைகளை எப்படிக் களைவது என்பதில் தான் இப்போது நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒரே வழி. கோவில்களில் சொத்துக்களை அதிகரித்துக் கொண்டே போக வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் இருக்கின்ற பணத்தை எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும். நமது குடும்பங்களில் கல்விக்காக எந்த அளவு பெற்றோர்கள்  சிரமப்படுகிறார்கள் என்பது ஒன்றும் புதிதல்ல. முடிந்தவரை கல்விக்காக ஏழை மாணவர்களுக்கு உதவ ஒவ்வொரு கோவில் நிர்வாகமும் முயற்சி செய்ய வேண்டும். கேட்டால் தான் கொடுப்போம்  என்பதை விட கேட்காமலே கொடுக்கின்ற பழக்கத்தை நிர்வாகங்கள் கையில் எடுக்க வேண்டும். நம்மைச் சுற்றி உள்ள ஏழைப் பிள்ளைகளின் கல்வி அல்லது தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு என்று கல்வி சம்பந்தமான எதனையாவது கையில் எடுத்து செயலில் இறங்க வேண்டும்.

கோவில் பணம் என்பது மக்களின் பணம். அதனை ஏன் சேர்த்து வைத்து அழகு பார்க்க வேண்டும்? யாருக்கும் உதவாமல் இப்படி சேர்த்து சேர்த்து  என்ன செய்யப் போகிறோம்?

இங்கு தான் அறப்பணி வாரியம் உள்ளே வருகிறது. அந்தப் பணம் ஏழை இந்து மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் உயரிய நோக்கம் கொண்டது. அதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. 

சரியான வழிமுறைகளைக் கொண்டு இந்த அறப்பணி வாரியம்  அமைக்கப்பட வேண்டும்.  வாரியம் தேவை தான்!

No comments:

Post a Comment