ஆமாம், நமது டுரியான் பழங்கள் இப்போது என்ன நிலையில் இருக்கின்றன? அதுவும் KING MUSANG என்று சொல்லப்படுகின்ற பழங்களின் அரசன் நிலை என்ன?
இன்றைய நிலையில் அனைத்தும் வர்த்தகம் என்று ஆன பிறகு எதுவும் அதனின் அசல் சுவையை அனுபவிக்க முடிவதில்லை என்பதும் உண்மை தான். டுரியானுக்கும் அந்த நிலைமை தான். வர்த்தகர்கள் எதனைப் பயிர் செய்தாலும் அவர்களின் நோக்கம் ஒன்று தான். சீக்கிரம்! சீக்கிரம்! சீக்கிரம்! சீக்கிரமாக அறுவடை செய்ய வேண்டும். பணம் பார்க்க வேண்டும். அது அவர்களின் இயல்பு என்றாலும் அந்தப் பழங்களின் இயற்கைத் தன்மையை முற்றிலுமாக அழித்து விடுகிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அது தான் நமது டுரியானுக்கும் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் "கிங் மூசாங்" பழத்தைச் சாப்பிட்ட போது அதனை உணர முடிந்தது. டுரியான் பழங்களிலேயே மிகவும் சுவையானது கிங் மூசாங். ஆனால் என்ன ஒரு சோகம். அதன் சுவையையே மாற்றிவிட்டார்கள் நமது வியாபாரிகள்!
இது பற்றி ஒரு மலாய் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஓர் அதிர்ச்சி தகவலையும் பகிர்ந்து கொண்டார். சாதாரணமாக ஒரு டுரியான் மரம் அறுவடை ஆக சுமார் ஏழு, எட்டு ஆண்டுகள் பிடிக்கும். மிகவும் நீண்ட காலம். அதனால் சீன நண்பர்கள் அதன் அறுவடை காலத்தைக் குறைக்க பலவிதமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அந்த நீண்ட காலத்தை இரண்டு மூன்று ஆண்டுகளுக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். அந்த ரசாயன உரம் அந்த மரத்தின் வளர்ச்சிக்கு மட்டும் அல்ல அந்த மரத்தின் பழங்களுக்கும் சென்றடைகிறது என்பது தான் அதிர்ச்சி தகவல். அந்த ரசாயன பழங்களைத்தான் நாம் சாப்பிடுகிறோம். புற்று நோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் எல்லாம் அதில் கலக்கின்றன என்பதாக அவர் கூறினார். அதனை நாம் எப்படி தெரிந்து கொள்ளுவது? இன்று நாம் சாப்பிட்டால் நாளை நமது நாக்கில் பிசுபிசுத் தன்மை ஏற்படும் என்பதாக அவர் கூறினார்! அதனால் தான் சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் நமது பழங்களை வாங்குவதில்லை என்பதையும் கூடுதலாகச் சொல்லி வைத்தார்.
சரி, டுரியான் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்யலாம். ஒரே வழி. சாதாரண கம்பத்து டுரியான்களை வாங்கிச் சாப்பிடுங்கள். அவைகள் சற்றுக் கரடு முரடாக இருக்கும். எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தாது. காலா காலமாக அந்தப் பழங்களைத்தானே சாப்பிட்டோம்? இப்போது சாப்பிட்டால் என்ன கெட்டு விடப்போகிறது!
முடிந்தவரை ரசாயனம் கலந்த டுரியான்களுக்கு ஆதரவு கரம் நீட்டாதீர்கள்! இனி அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கும் என நம்புவோம்!
No comments:
Post a Comment