Monday 11 March 2019

ஆசிரியர் பற்றாக்குறை தான் காரணமா...?

தேசியப் பள்ளிகளில் பெரும்பாலான பெற்றோர்கள்  கணக்குப் பாடமும் விஞ்ஞானமும்  ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதாகப் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் ஒரு சிலர் அதனை எதிர்க்கவும் செய்கிறார்கள் என்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதனால் அந்த இரண்டு பாடங்களையும் இரு மொழிகளில் அதாவது தேசிய மொழியிலும் ஆங்கிலத்திலும் படித்துக் கொடுக்க வேண்டியது அமைச்சின் கடமையாகிவிட்டது.

நமக்கும் அவர்களின் பிரச்சனைப் புரிகிறது. பொதுவாக  பெற்றோர்கள் கணிதம், விஞ்ஞானம்  போன்ற  பாடங்களை ஆங்கிலத்தில்  கற்றுக்  கொடுப்பதையே  விரும்புவார்கள். பல காரணங்கள் உண்டு.  குறிப்பாக  உலக அளவில் போட்டியிடும் போது  விஞ்ஞான  இதழ்கள்  அனைத்தும் ஆங்கிலத்திலேயே வருகின்றன. அதற்கு நல்ல ஆங்கிலப் புலமை வேண்டும்.  அதனைப் பள்ளிகளில் இளம் வயதிலேயே கற்கும்  போது அவர்கள் எந்தவித சிரமத்தையும் எதிர் நோக்க மாட்டார்கள். 

அந்தக் கால காலனிய ஆட்சியில்  அரசாங்க  வேலைக்குத்  தேவைப்பட்ட வேலையாள்களைப்  பள்ளிகள் உருவாக்கின. அதுவும் ஆங்கில வழி கல்வியின் மூலம். அது அந்த நேரத்தில் தேவையாக இருந்தது. பின்னர் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டன. மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. 

ஆங்கிலம் நமக்குப் புதிய மொழி அல்ல. பின்னர் வந்த கல்வித் துறை மாற்றங்களில் ஆங்கிலம் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டது.  காரணம் மலாய் மாணவர்களின் திறமையைக் கேள்விக் குறியாக ஆக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக அவர்கள் ஆங்கில மொழியைக் கற்க இயலாதவர்கள் என்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.

அதன் பலன் கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலத்தில் படித்துக் கொடுக்க  இன்று மலாய் ஆசிரியர்கள் இல்லை! ஆங்கில மொழி சம்பந்தப்பட்ட அனைத்தும் மலாய் ஆசிரியர்களே படித்துக் கொடுக்க வேண்டும் என்பது கல்வி அமைச்சின் கொள்கை என்பதால் இன்று தேர்ச்சிப் பெற்ற மலாய் ஆசிரியர்கள் யாரும் இல்லை!  இன்று பல மலாய் ஆசிரியர்கள் ஆங்கில மொழியை மலாய் மொழியில் தான் படித்துக் கொடுக்கிறார்கள் என்பதும் உண்மை!

இன்றும் ஆசிரியர் கல்லூரிகளில் ஆங்கில மொழியைக் கற்க மலாய் மாணவர்கள் தயாராக இல்லை! அதனால் பள்ளிகளில் ஆங்கிலம் படித்துக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை! 

ஆக,  இந்த ஆசிரியர் பற்றாக்குறை என்பது கல்வி அமைச்சால்  செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது தான் உண்மை! எங்கோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அது வரை ஆங்கிலத்தைத் தள்ளி வைக்க வேண்டியது தான்!

No comments:

Post a Comment