Tuesday 5 March 2019

பாரிசான் வெற்றி...!

செமினி இடைத் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்றது! இது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா? 

இந்த இடைத் தேர்தலில் ஒரு சிறிய வித்தியாசத்தில் பக்காத்தான் வெற்றி பெறலாம்  என நான் நினைத்தேன்.  காரணம் அம்னோவும், பாஸ் கட்சியின் கூட்டும் பலமானவை என்பது தெரியும்.  அவர்கள் வெற்றி பெற்றார்கள், வாழ்த்துகள்! 

பாரிசான் அறுபது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி. பாஸ் ஏறக்குறைய மாநிலக் கட்சி என சொல்லலாம். ஆனால் பாஸ் கட்சி மத்திய அரசாங்கத்தை அமைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லாத ஒரு கட்சி. மற்ற கட்சிகளுடன்  கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டாலும் அது எந்தக் காலத்திலும் நடக்கவில்லை!

பாஸ் இதறகு முன்பும் பல தடவை  அம்னோவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டாலும்  அது நடக்கவில்லை! காரணம் அம்னோ பாஸ் கட்சியை பல தடவை முதுகில் குத்தியக் கட்சி என்பது அதன் முன்னாள் தலைவர்களுக்குத்  தெரியும்!

இரு கட்சிகளுக்குமே பெரிய வித்தியாசம் உண்டு. பாஸ் இஸ்லாம், மலாய் உரிமைகள் என்பதைத் தவிர வேறு எதனையும் அதன் கவனத்தில் கொள்ளுவதில்லை. அவர்கள் அடிக்கடி அதனைத் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பவர்கள்! அம்னோவின் போக்கு வேறு. அவர்களுக்கு ஊழல் தான் முதலிடம்! ஊழல் மேல் கைவைத்தால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது! ஊழலிலேயே ஊறியவர்கள்!

சமீப காலங்களில் பாஸ் கட்சியையும் அம்னோ தங்கள் வசம் இழுத்துக் கொண்டது.  அதன் எதிரொலி தான் சமீபத்தில் பாஸ் கட்சியின் மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள்!

இப்போது அம்னோ எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது! அதனால் இது நாள் வரை பாஸ் என்ன பேசி வந்ததோ அதையே அம்னோவும் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது! அது தான் செமினி இடைத் தேர்தலில் ஏற்பட்டது.

ஆம்! முன்னாள் அம்னோ அமைச்சர் பேசிய பேச்சு. உண்மையில் அது தேச நிந்தனை சட்டத்தின் கீழ் வர வேண்டியது. சட்டத்துறை தலைவர் குர்ரானில் சத்தியம் செய்யவில்ல என்றால் அவர் எப்படி நேர்மையளராக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்! சட்டம் தெரிந்த ஓர் அமைச்சர் இப்படி பேசியிருப்பதை நம்மால் நம்ப முடியவில்லை தான்! ஆனால் என்ன செய்வது? இப்படிப் பேசினால் தான் தன்னை மக்கள் ஆதரிப்பார்கள் என்னும் நிலைக்கு அம்னோ தள்ளப்பட்டு விட்டது! 

இனி இவர்கள் இப்படித் தான் பேசி பிழப்பை நடத்த வேண்டும்! தேர்தல் ஆணையம் கண்காணிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment