Saturday 23 March 2019

மருத்துவமனையில் ஓர் அரை நாள்..!

சமீபத்தில் மருத்துவமனை ஒன்றிற்குச் செல்ல - நோயாளிக்குத் துணையாக - ஓரு வாய்ப்புக் கிடைத்தது.

ஓர் அரை நாள் என்று சொல்லலாம்.  காலை எட்டு மணியிலிருந்து பன்னிரெண்டு மணி வரை எனது நேரம். சரியான கூட்டம். எல்லா மருத்துவமனைகளிலும் இதே நிலை தானே!  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

நான் பெரும்பாலும் அங்கு வேலை செய்யும் மருத்துவர்களை உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பேன்! அது பிடிக்கும் என்பதல்ல.  அவர்கள் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத் தான்! வேலை பளு அல்லவா!

அப்போது ஏதோ ஒரு அதட்டல் குரல். அப்போது ஒரு மலாய்ப் பெண்மனி - டாக்டர் தான் -  ஒரு சீன இளைஞனைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.  அந்த சீன இளைஞன் படித்தவன் போலத் தெரியவில்லை. அந்த இளைஞன் ஒரு சீன டாக்டர் இருந்த அறையை ஒட்டி நின்று கொண்டிருந்தான்.  ஒரு வேளை அந்த சீன டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று அவருக்காக காத்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் அந்த மலாய் டாக்டர் அவனை பார்த்து "Chan, Come Here! Your Doctor Is Me!" என்று கத்தினார்!  எனக்கு அந்த டாக்டரின் ஆங்கிலம் புரிந்தது! ஆனால் புதிதாக இருந்தது! இது மலேசிய ஆங்கிலம், அவ்வளவு தான்!

அந்த சீன இளைஞன் போய்விட்டான். அந்த ஆங்கிலம் அவனுக்கும் புரிந்தது.

எனக்கு இரண்டு நாற்காலிகள் தள்ளி முன் வரிசையில் ஒரு நடுத்தர வயதுடைய  மலாய்க்காரரும் அவரது மனைவியும் உட்கார்ந்திருந்தனர். அந்த மலாய் நண்பர் அவருடைய மனைவியிடம்  "என்னா, இந்த டாக்டர் English பேசுறா!  Broken English! I Am Your Doctor!  என்றல்லவா சொல்ல வேண்டும்!  Broken English! என்று மனைவிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்!

அதனால் என்ன? இதெல்லாம் பெரிய விஷயமா?  ஆனாலும் மனதை நெருடிய ஒரு விஷயம் உண்டு. மருத்துவ படிப்புக்காக மாஞ்சி மாஞ்சி ஒரு ஐந்து ஆறு வருடங்கள் படித்து   மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்று டாக்டராக வருபவர்கள் ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு ஆங்கிலம்  கூட தெரியவில்லையென்றால்  இவர்கள் மருத்துவர்கள் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!  என்ன செய்வது? வங்காள தேசத்துக்காரனுடன் ஆங்கிலம் பேசி பேசி நமது டாக்டர்களுக்கும் அது பரவி விட்டதோ!

இருந்தாலும் இது பெரிய விஷயம் அல்ல.  நில்லுங்கள்! நான் சென்ற மருத்துவமனை எது என்று சொல்லவில்லையே. அந்தக் காலத்தில் அதனை Sakit Jiwa என்றார்கள். இப்போது Psychiatric Hospital  என்கிறார்கள்.  தமிழில் மனநல மருத்துவமனை என்று சொல்லலாம். அநாகரீகமாக  பைத்தியக்கார ஆஸ்பத்திரி எனவும் சொல்லலாம்!

அங்கு பேசுவது அவர்களுக்குத் தான் புரியுமே! அப்புறம் என்ன?

No comments:

Post a Comment