Monday 18 March 2019

சமயத்தை இழிவுபடுத்தினால்...?

சமயத்தை  இழிவு படுத்தினால் என்ன நடக்கும்? 

இஸ்லாமிய சமயத்தை இழிவு படுத்தினால் என்ன நடக்கும் என்பதை ஓரளவு நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மற்ற மதங்களை இழிவு படுத்தினால் ....? இன்னும் சரியான பதில் ... யாரிடமும் இல்லை. அதாவது எதுவும் நடக்கப் போவதில்லை என்பதே பாலரது எண்ணம். அதுவும் இந்து சமயத்தை இழிவு படுத்தினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதாகவே கடந்த காலங்களில் நமது எண்ணமாகவே இருந்தது!

சமீபத்தில் ஓரு முன்னாள் புகைப்படக்காரர் இந்து மதத்தை இழிவுபடுத்தி தனது முகநூலில் எழுதியதற்காக அவர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

முதலில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் பின்னர் அவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.   குற்றத்தை ஒப்புக் கொண்டு,  பின்னர் 'நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை!' என்றால் என்ன அர்த்தம்?

நாமும் கொஞ்சம் ஊகித்துப் பார்க்கலாம். முதலில் அவர் ஒப்புக் கொண்டது அவரின் சொந்த முடிவு.   பின்னர் அவர் ஒப்புக் கொள்ளாதது வேறு யாரோ செய்த முடிவை  அவர் ஒப்புவிக்கிறார்! அப்படித்தான் நமக்குத் தோன்றுகிறது.

இதில் ஏதோ அரசியல் ஊடுருவல் இருப்பதாகாவே நாம் எண்ண வேண்டியுள்ளது. காரணம் அரசாங்கம் எதனைச் செய்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்பதாக ஒரு தரப்பு வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதை சமீப காலமாக  நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அவர்கள் நோக்கம் அரசியல் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும்.  ஆர்பாட்டங்களை ஏற்படுத்தி நாட்டில் அமைதியைக் குலைக்க வேண்டும்./  இது தான் அவர்களது நோக்கம். 

இஸ்லாத்தை அவமதிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்து சமயத்தை அவமதித்தால், இழிவு படுத்தினால் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் என்ன நடக்கிறது பார்ப்போமே என்கிற ஒரு நிலையை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனைச் செய்ய நினைக்கிறார்கள். 

நீதிமன்றத்தின் நிலைப்பாடு நமக்குத் தெரியாது. ஆனால் சமயத்தை இழிவுப் படுத்துபவர்கள் மீது  கடுமையான  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடுமில்லை.

சமயம் என்பது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம்.  சமயத்தின் மூலம் நாட்டில் அமைதியின்மையைக் குலைப்பது என்பது மிகவும் ஆபத்தான விஷயம்.  இந்த ஆபத்தை விளைவிப்பவர்கள் அரசியல்வாதிகள் என்பது நமக்குத் தெரியும். பதவிகளுக்காக அவர்கள் எதனையும் செய்வார்கள்.

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். சமயத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் ஆபத்தானவர்கள்.  இந்த ஆபத்தானவர்களை நாம் எளிதில் விட்டு விட முடியாது. ஏதோ ஒப்புக்காக தண்டனைகளைக் கொடுக்க முடியாது. நீண்ட கால சிறைத் தண்டனை மட்டும் அல்ல  அவர்கள் எல்லாத் தண்டனைகளுக்கும் உரியவர்கள். 

அரசாங்கம் சமயத்தை இழிவு படுத்தும் நபர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.

சமயத்தை இழிவு படுத்துபவர்கள் இழி நிலையினர்! இந்த இழிப்பிறவிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்>

No comments:

Post a Comment