Sunday 31 March 2019

இவர்கள் திருந்த மாட்டார்களா...?

நமக்கே சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. கோடிக்கணக்கில்  பணத்தைச் சுரண்டி, பொருளாதார ரீதியில் நாட்டைச் சீரழித்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாழாக்கிய ஒரு மனிதருக்காக, அவரின் மனைவிக்காக,  இன்று நினைத்த இடத்திலெல்லாம் போராட நினைக்கும் அம்னோவினரையும் நஜிப்பின் ஆதராவாளர்களையும் பற்றி என்னவென்று சொல்லுவது?

ஓர் இடைத் தேர்தல் வந்தால் அங்கு சமயத்தைப் பற்றி பேசி அரசியலாக்குவதும், மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பேசி அரசியலாக்குவதும் - எத்தனை நாளைக்கு இதனை அரசாங்கம் சகித்துக் கொள்ளப் போகிறது? 

இவர்களின் உரிமைகளைப் பற்றி யார் கேளவிகள் எழுப்பியது? இவர்களின் சமயத்தைப் பற்றி யார் கேள்விகள் எழுப்பியது? இவர்களே கேள்விகளை எழுப்புவதும் இவர்களே பதிலைச் சொல்லுவதும் அதனை அரசியலாக்குவதும் இதையே ஒரு பொழுது போக்காக செய்வதும்  - இன்னும் எத்தனை ஆண்டுகள் இதனை அரசாங்கம் அனுமதிக்கப் போகிறது?

நாட்டின் விலைவாசி ஏற்றத்தை அரசாங்கத்தால் இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கம் சரியான முறையில் இயங்காதவாறு  அவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவதே நஜிப்பின் ஆதரவாளர்கள் தான்! 

நஜிப்பை ஆதரிப்பவர்கள் யார்?  நஜிப் பதவியில் இருந்த போது அவர் மட்டும் ஊழல் செய்யவில்லை. அவர் மனைவி மட்டும் ஊழல் செய்யவில்லை.  அரசாங்கத்தில் இருந்த அனைவருமே ஊழல் செய்தார்கள்!  அப்படி ஊழல் செய்தவர்களை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.  இப்படி ஊழலில் திளைத்து பணத்தை இலட்சக் கணக்கிலும், கோடிக்கணக்கிலும் கொள்ளையடித்தவர்கள் தான் இன்று நஜிப்புக்குக் கொடி பிடிக்கிறார்கள்!  இப்போது புதிய அரசாங்கத்தின் கெடுபிடியால் ஒன்று செய்ய இயலாமல் கையைப் பிசைந்துக் கொண்டிருக்கிறார்கள்! இவர்கள் தான் இன்றைய அரசாங்கத்திற்கு  முதல் எதிரியாகத் திகழ்கிறார்கள்.

அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதில்லை. முந்தைய அரசாங்கத்தில் என்ன செய்தார்களோ அதையே செய்கிறார்கள். அதனால் மக்கல் நலன் பாதிக்கப்படுகிறது. 

அரசாங்கம் இவர்களை களையெடுக்காத வரை இவர்களின் அட்டகாசம் அடங்கப் போவதில்லை. இவர்களுடைய கோபமெல்லாம் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய இலஞ்சப் பணம் இப்படி வீணாகைப் போனதே என்கிற ஆத்திரத்தில் அடாவடித் தனம் செய்கிறார்கள்!

நல்லவர்கள் யாரும் நஜிப்பின் தலைப்பக்கம் கால் வைத்துக் கூட படுக்க மாட்டார்கள். ஆனால் நஜிப் எந்தக் காலத்திலும்  நல்லவர்களைத் தன் பக்கம்  வைத்துக் கொள்ளவும் இல்லை, சேர்த்துக் கொள்ளுவதும் இல்லை!  நல்லவர்கள் அவருக்குப் பகைவர்கள்!

இவர்கள் திருந்துவதற்குக் காலம் பிடிக்கும்!

No comments:

Post a Comment