Friday 22 March 2019

தேசிய விமானத்தின் நிலை என்ன?

நமது தேசிய விமானமான 'மாஸ்" என்ன நிலையில் உள்ளது? 

கடந்த சில வாரங்களாக பல விதமான செய்திகள். விற்று விடலாம் அல்லது இழுத்து மூடி விடலாம் என்பதாக செய்திகள் வருகின்றன. நஷ்டத்தைத் தாங்கும் அளவுக்கு அரசாங்கத்தில் பணம் இல்லை என்றும் கூறிவிட்டார்கள்.

ஆமாம்! எவ்வளவு தான் பணத்தைக் கொட்டுவது?  விடியலே இல்லையா என்று சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்! எதுவுமே நடக்கவில்லை! உள்நாட்டு, வெளிநாட்டு ஜாம்பவான்கள் எல்லாம் தலைமையேற்றுப் பார்த்துவிட்டார்கள்.  ஊகும்...! கடன் தான் எகிறிக் கொண்டே போகிறதே தவிர எந்த ஒரு தீர்வையும் காண முடியவில்லை!

நிதியமைச்சர் லிம்  குவான் எங் மாஸ் விமான சேவை நிறுத்தப்படாது என்று உறுதி அளித்திருக்கிறார். அதன் அர்த்தம்  சேவை தொடரும் அதே சமயத்தில் கடனும் தொடரும் என்று எடுத்துக் கொள்ளலாம். 

ஆனால் ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  இந்தப் பிரச்சனையை நிதி அமைச்சரிடமே விட்டு விட்டால் நல்லது என்றே  நான் நினைக்கிறேன். பெரிய பெரிய சவால்களை எல்லாம் சமாளித்தவர் அவர்.  இது  மட்டும் முடியாதா என்ன? 

விமான சேவை என்பது ஒரு பெரிய வியாபாரம். மற்ற வியாபாரங்களைப் போல அதுவும் ஒரு வியாபாரம். அவ்வளவு தான். அதனை வியாபாரமாகத் தான் கருத வேண்டும். அங்கே புனிதம் என்பதாக ஒன்றுமில்லை! அது வழிபாட்டுத் தலமும் இல்லை! அது வியாபாரம். அதற்கு உள்ள மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்.

மாஸ் விமானத்தின் பலவீனம் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.  அதன் ஊழியர்கள் தான் அதன் பலவீனம் என்றால் அதனைக் களைய வேண்டும். ஏற்கனவே ஓர் இந்தியத் தம்பதியினரால் நடத்தப்பட்ட ஒரு விமான நிறுவனத்தையே  இழுத்து மூடிய பெருமை நம் நாட்டு ஊழியர்களுக்கு உண்டு.  விமான நிறுவனத்தின் நலனை விட ஊழியர்களின் நலனில் - அவர்களின் கட்டுப்பாட்டில் - அனைத்தும் இயங்க வேண்டும் என்று நினைக்கும் ஊழியர்களால் தான் அதிக நட்டத்தை மலேசிய விமான நிறுவனங்கள் எதிர் நோக்குகின்றன எனச் சொல்லலாம்!  மாஸ் விமானத்தின் பலவீனமே அதன் ஊழியர்கள் தான்!

இன்றைய நிலையில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தான் அதனைச் சரிபடுத்த சரியான ஆள்.

தேசிய விமான நிறுவனம் தனது சேவையைத் தொடர நிதி அமைச்சரிடமே விட்டு விடுங்கள்!

அவரே வெற்றியைக் கொண்டு வர முடியும்!

No comments:

Post a Comment