Friday 22 March 2019

அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகரிப்பு..!

எம்.ஆர்.எஸ்.எம். எனப்படும் மாரா அறிவியல் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என அறியும் போது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிரது.

இது ஆரம்பம். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான  மாணவர்கள் சேர்வார்கள் என நம்பலாம்.  பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டால்  அதன் பின்னர் சேர்க்கை என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது.

இது நாள் வரை நமது மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.  கல்லூரிகளில் இடம் இருந்தும்  இந்திய மாணவர்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்பதை ஒரு கொள்கையாகவே பல தலைமை ஆசிரியர்கள் வைத்திருந்தார்கள் என்பதும் உண்மை. 

ஒரு தலைமை ஆசிரியரை நான் அறிவேன். அவரது கல்லூரியில் இடம் இருந்தும் இந்திய மாணவர்களுக்கு அங்கு இடம் கொடுப்பதில்லை. அது 'மேலிடத்து' உத்தரவாக இருக்கலாம். முந்தைய ஆட்சியில் 'நாங்கள் வைத்தது தான் சட்டம்!' என்னும் நிலை தான் கல்லுரிகளில் நிலவி வந்தது! கேட்க ஆளில்லை! 

இப்போதைய அரசாங்கம் அதனை மாற்றியிருக்கிறது.  புறநகர் மேம்பாட்டுத்துறை  துணை அமைச்சர் ஆர். சிவராசா அவர்களைப் பாராட்டுகிறோம்.   காரணம் வெறும் பதவி மட்டும் போதாது.  அதனைப் பயன்படுத்த வேண்டும். அவரின் பதவியை வைத்து அவர் பல முயற்சிகளை எடுத்து  இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்.  வாழ்த்துகிறோம். 

கல்லுரிகளில் சேர்ந்து இடை இடையே 'விட்டு ஓடும்!' ' மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மாணவர்களின் இடங்களையும் இந்திய மாணவர்களைக் கொண்டே பூர்த்தி செய்யப்பட வேண்டும்  என்பதையும் கேட்டுக் கொள்ளுகிறோம். 

இடம் கிடைத்தும்  ஏற்க மறுக்கும் மாணவர்களுக்காக நாம் வருந்துகிறோம்.  இத்னை நாம் எதிர்ப்பார்த்தது தான்.  காரணங்கள் பல.  முதலாவது உணவும் ஒரு காரணம்.  சமயமும் ஒரு காரணம். மலாய் மாணவர்களோடு எப்படி ஒத்துப் போவது என்பன போன்ற பல காரணங்களினால் நமது மாணவர்களை விட பெற்றோர்களே அதிகம் கவலைப் படுகின்றனர்!

ஆனால் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் காலப் போக்கில் காணாமல் போய்விடும்!  பக்கத்து வீட்டு மாணவன் போனான்! எதிர் வீட்டு மாணவன் போனான்! பெரியப்பா  மகன் போனான்! அப்புறம் நம்ம வீட்டுப் பையனும் போவான்!  அது வரையில் கொஞ்சம் காலம் எடுக்கும். 

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நமது மாணவர்கள் வெற்றிக்கொடி நாட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை!

No comments:

Post a Comment