Tuesday 12 March 2019

சமய அவமதிப்பு...!

இஸ்லாம் அல்லாத பிற சமய அவமதிப்புக்கள் என்பது  நம் நாட்டில் சர்வ  சாதாரணமான விஷயம் என்பது நமக்குத் தெரியாமலில்லை. அது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது!

அவமதிப்புக்களின் மீது நடவடிக்கை எடுக்க சட்டங்கள் உண்டு, காவல்துறைக்கு அதிகாரங்கள் உண்டு.ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை! அதே ஒன்றே போதும் அவமதிப்புக்கள் தொடருவதற்கு!

குறிப்பாக காலணிகளில், செருப்புக்களில் இந்து தெய்வங்களின் படங்களை அச்சிட்டு அதனை விநியோகம் செய்திருக்கின்றனர். அதுவும் ஒரு முறை இருமுறை அல்ல, பல முறை! இதனைத் தடுப்பதற்கு சட்டங்கள் பயன்படவில்லை!  காவல்துறை செயல் படவில்லை!

அதனால் இதனைத் தடுப்பதற்கு ஒரே வழி அதறகு ஏற்றவாறு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். அதற்கென்று தனிப்பிரிவு அமைத்து செயல்பட வேண்டும். ஆக்ககரமான சட்டத்தின் மூலம் அனைத்து அவமதிப்புக்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இது பல்லின மக்கள்,  சமயங்களைச் சார்ந்த ஒரு நாடு. பொதுவாக சமயங்கள் என்றாலே ஒவ்வொரு மனிதரின் உணர்வுகளைத் தூண்டுகிற ஒரு விஷயம். சமயங்களில் சிறியது, பெரியது என்றெல்லாம் கிடையாது. ஒவ்வொன்றும் அந்த அந்த சம்யத்தினரின் வழிபாட்டுக்கும், வணக்கத்துக்கும் உரியது தான். அதனால் தான் அத்தனை சமயங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம்மிடையே தொடர்ந்து நம்மோடு பயணம் செய்து கொண்டிருக்கின்றன.

நாம் சொல்ல வருவது ஒன்று தான்.  எல்லா சமயங்களுக்கும் அதனதன் மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும். இந்நாடு சர்வ சமயங்களையும் சார்ந்த ஒரு நாடு. இஸ்லாம் அதிகார்ப்பூர்வ சமயம் என்றாலும் எந்த ஒரு சமயமும் இந்நாட்டிலிருந்து ஒதுக்கப்படவில்லை. அனைத்து சமயங்களும் அரசாங்கத்தின் அரவணைப்போடு வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன!

நமக்குத் தேவை எல்லாம் அதற்கு சரியான ஒரு பாதுகாப்பு. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் ஆகி விட முடியாது! நமக்கு யாரும் சட்டாம் பிள்ளைகள் வேண்டாம்!  நமது சமயத்தை வழி நடத்த மற்ற சமயத்தினர் வேண்டாம். 

எந்த ஒரு சமயமும் அவமதிக்கப்பட்டால் அதற்கான தண்டனை மிக அவசியம். அது சட்டத்தின் மூலம் வர வேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.

சமய அவமதிப்பு  கண்காணிக்கப்பட வேண்டும்! வேரறுக்கப்பட வேண்டும்!

No comments:

Post a Comment