Tuesday 26 March 2019

நாம் தமிழர்...!

இப்போதெல்லாம்  நாம் தமிழர்  என்று சொன்னாலே சிலர் விரும்புவதில்லை.  இது ஏன்  என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

அவனவன் தன் இனத்தைப் பற்றி பெருமைப்படுகிறான்.  தவறில்லையே! என் இனத்தைப் பற்றி  நான் பெருமைப்படாமல்  வேறு ஒரு இனத்தவனா பெருமைப்படுவான்!

தமிழகத்தில் ஏற்பட்ட தாக்கம் இங்கும் எதிரொலிக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இது தேவையற்றது என்று சொல்லிவிட முடியாது. தேவை தான்.  நமது இனத்தின் பெருமையை நாம் அறியாததால் தான் இன்று வீழ்ந்து கிடக்கிறோம்.  இன்னும் எழுந்த பாடில்லை.  காரணம் நம்மை அறியாமலேயே நாம் வீழ்த்தப்பட்டிருக்கிறோம்..  அதன் காரணங்களையெல்லாம் நாம் புரிந்து கொள்ளவில்லை! புரிந்து கொள்ள மறுக்கிறோம்! அந்த அளவுக்கு நாம் அவர்களை நம்புகிறோம்! 

ஒரு முறை நண்பர் ஒருவர் ஒரு வேலையாக என்னிடம் வந்தார். பேச்சு வாக்கில் தன்னை மலையாளி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  நான் மலயாளி இல்லை, தமிழன் என்று சொன்னேன். அவ்வளவு தான். நான் அதனை ஒரு பிரச்சனையாகக் கருதவில்லை.அவரும்அது பற்றி ஒன்றும் பேசவில்லை.  

இன்னொரு முறையும் அது நடந்தது.   எங்களிடம் தொழில் பயிற்சி பெறும் ஒரு  மாணவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன்  தீடீரென்று  "நான்  மலையாளி" என்று  அவனே  சொன்னான்!  நான்  அவனிடம்  கேட்கவில்லை. ஆனாலும் அவனே அதனைச் சொன்னான்!

யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுடைய பெயரை வைத்தே நாம் அவகளைக் கணித்துவிடலாம். 

ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லுவது ஏன்?  காரணங்கள் பல. நான் சொல்ல வருவதெல்லாம் நமக்கும்  அந்தப்  பெருமைகள்   வேண்டும்  என சொல்ல வருவது தான். நிச்சய மாக  நமக்கும்  பெருமைகள்  பல உண்டு. நமது  பெருமைகளை  நாம்  வெளிக் கொணர வேண்டும்.  ஒருவன் மலையாளி என்று சொல்லுவதில் பெருமை கொள்ளுகிறான். ஒருவன் தன்னைத் தெலுங்கர் என்று சொல்லுவதில்  பெருமை கொள்ளுகிறான்.  ஆனால்  நாம் மட்டும் தமிழன் என்று சொல்லக் கூடாது இந்தியன் என்று சொல்ல வேண்டுமென்றால் எப்படி? 

இப்போது நானும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  பேசுகின்ற போதே  நான்  தமிழன்  என்று  முன் கூட்டியே  சொல்லி விடுவதுண்டு! அதனால் நாம் பயந்து பயந்து பேச வேண்டியதில்லை! 

நாம் தமிழர்  என்பதிலே பெருமைப்பட  வேண்டும். பெருமைப்பட வாழ வேண்டும். மற்றவர் மதிக்க வாழ வேண்டும்.  

இந்தியர்களில் நாமே அதிக எண்ணிக்கையில் உள்ளோம்.  முன்பெல்லாம்  நம்மை வழி நடத்த நிறைய  தமிழர் இயக்கங்கள் இப்போது அவைகள் எல்லாம் மாற்றப்பட்டு நிறைய இந்திய  இயக்கங்கள். அனைத்தும் தமிழர்களை அதிகமாக கொண்ட இயக்கங்கள். ஆனால் தலைவர்கள் மட்டும் தமிழர் அல்லாதவர்கள்! 

இதற்கும் நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்.  இனி நாம்  தமிழர்  தமிழர் என்று தான் சொல்ல வேண்டும். பொறுப்புக்களையும்  நாம் ஏற்க வேண்டும். நாம் விட்டுக்கொடுத்தால்  இனி அரசியலில் கூட நாம் இருக்க மாட்டோம்! இப்போதே  நாம் அதனைப்  பார்த்துக்  கொண்டு  தான் இருக்கிறோம். தமிழ் நாட்டு  நிலைமை நமக்கு இங்கு வேண்டாம்.

நாம் தமிழர்! நாமே தமிழர்!

No comments:

Post a Comment