பரிட்சை முடிவுகள் வெளியாகி விட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். வெற்றி பெற்ற மாணவர்கள் இனி பல்கலைக்கழகங்கள், கல்லுரிகள் என மேற் கல்வியை நோக்கிப் படையெடுப்பார்கள்.
எல்லாருக்குமே நமது வாழ்த்துகள். மேற் படிப்பு படிக்க ஒரு சிலரால் முடியும். பலரால் முடியாது. கலிவிக்கடன் ஒரு சிலருக்குக் கிடைக்கும்; பலருக்குக் கிடைக்காது! இதையெல்லாம் மீறித் தான் நமது மாணவர்கள் மேற் கல்வியைத் தொடர்கிறார்கள்.
ஆனாலும் அவர்களைப் பற்றி நாம் பேசப் போவதில்லை. நமக்குக் கவலையளிக்கும் பிரச்சனை என்பது எஸ்.பி.எம்> பரிட்சையில் தோல்வி அடைந்தவர்களைப் பற்றி தான்.
தோல்வியடைந்தவர்களில் ஒரு சிலர் மட்டும் தான் தொழிற் பயிற்சிகள் பெற விண்ணப்பம் செய்கிறார்கள். இது நம்மிடையே உள்ள அறியாமை தான் காரணம். மலாய் இன மாணவர்களில் 95 விழுக்காடு மாணவர்கள் தொழிற் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். இது சாதாரண விஷயம் இல்லை.
நமது இன மாணவர்களில் மலாய் மாணவர்களைப் போல தொழிற் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால் நமது முன்னேற்றம் யாரும் எதிர்ப்பாராத அளவுக்கு எங்கோ போயிருக்கும்.
அரசாங்கம் இலவச பயிற்சிகள் கொடுக்கின்றது. . ஆறு மாதங்கள், ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், குறுகிய காலப் பயிற்சி, நீண்ட காலப்பயிற்சி என்று பலப்பல பயிற்சிகள் கொடுப்பதை நாம் பார்க்கிறோம்; கேட்கிறோம். இன்னும் ஒரு சில பயிற்சிகளுக்கு அரசாங்கம் மாதாமாதம் குறிபிட்ட ஒரு தொகையை மாணவர்களின் செலவுகளுக்காக கொடுக்கிறார்கள்.
ஆனால் இவைகளையெல்லாம் நாம் ஒதுக்கி விடுகிறோம். நமக்கு என்ன தான் வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை! பெற்றோர்களோ தங்களது பிள்ளைகளின் மேல் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பரிட்சையில் தோல்வி அடைந்தால் அருகில் உள்ள ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் ஆயிரம் வெள்ளியாவது சம்பளம் கிடைக்குமே என்று நினைக்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றிலுமே அவன் தோல்வி அடைகிறோன். அந்தப் பணம் அவன் குடும்பத்திற்கும் உதவில்லை. கடைசியில் எதுவும் கற்காத, கல்வி அறிவு பெறாத-மனிதனாகிவிடுகிறான்!
மாணவர்களின் தோல்விகளில் பெற்றோர்களின் பங்குதான் அதிகம். உங்களுக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உங்கள் பிள்ளை கல்வி கற்றவனாக இருப்பது தான் முக்கியம்.
நாம் கல்வி கற்ற சமுதாயமாக, தொழிற் திறன் பெற்ற சமுதாயமாக இருந்தால் மட்டுமே நாம் மரியாதையும் மதிப்பும் பெறுவோம்!
No comments:
Post a Comment