Thursday 14 March 2019

எதிர்க்கட்சி என நினைப்போ..?

பிரதமர் டாக்டர் மகாதிர் சரியானதொரு கருத்தைச் சொன்னார்.

"காலம் பூராவும் எதிர்கட்சியிலிருந்து கொண்டு எதிர்ப்பு அரசியலையே பேசிப் பேசி இப்போது தாங்கள்அரசாங்கத்தின் ஒரு பகுதியினர்   என்பதை  மறந்து  போய்  இங்கேயும் எதிர்க்கட்சியினரைப் போல நடந்து கொள்ளுகின்றனர்!"  என்பதாக அவர் கூறியிருந்தார்.

உண்மை தான். சமீபத்தில் பேரா ஆட்சி மன்ற உறுப்பினர் அ.சிவநேசன் பேசிய பேச்சு அப்படித்தான் நம்மை நினைக்க வைக்கிறது! அவர் பேசியது தவறு என்று நாம் சொல்லவில்லை.  ஆனால் இந்த ஹீரோ வேஷம் எல்லாம் வேண்டாம் என்பது தான்.

அவர் பிரதமர் துறை துணையமைச்சர் வேதமூர்த்தியைக் குறை சொல்லுவதாக  அமைந்திருந்தது அவரது உரை. அவர் கூறினார்: அரசாங்கத்தில் இந்தியர்களின் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க வேதமூர்த்தி என்ன செய்திருக்கிறார், என்ன செய்கிறார்? என்பது தான்.

இதைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன்.  ஆனால் வேதமூர்த்தியைப் பார்த்து இப்படிக் கேள்வி கேட்பதால் என்ன ஆகப் போகிறது? என்னைக் கேட்டால் இந்தக் கேள்விக்கு வேதமூர்த்தி மட்டும் பொறுப்பல்ல! அனைத்து இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பானவர்கள் தாம்.

சிவநேசன் இப்படி பேசுவது பழைய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துகிறது. முந்தைய அமைச்சரவையில் வேதமூர்த்தி  அமைச்சராக இருந்த போது ம.இ.கா.வினர்  முற்றிலுமாக அவரை  உதாசீனப்படுத்தினர். எந்த ஒத்துழைப்பையும் அவர்கள் கொடுக்கவில்லை. அது நமக்குப் புரிகிறது.  ம.இ.கா.வினருக்கு இந்தியர்  நலன்  என்று  ஒன்று  இருப்பதாக அவர்களுக்கே தெரியாது! அப்படித் தான் அவர்கள் வளர்க்கப் பட்டவர்கள்! ஆனால் சிவநேசனோ, வேதமூர்த்தியோ அப்படி அல்ல. இவர்களுக்குச் சுத்த இந்திய ரத்தம், தமிழர் ரத்தம் ஓடுகிறது. அதனால் இவர்களை அந்தக் கும்பலோடு ஒப்பிடக் கூடாது.

சிவநேசன் கேட்ட கேள்வி சரி தான். ஆனால்  என்ன செய்ய வேண்டும்? நம்மைப் பொறுத்தவரை கட்சியை மறந்து விட்டு அனைத்துத் தரப்பினரும் - நாடாளுமன்ற, சட்டமன்ற - உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து நமது பிரச்சனைகளுக்குக்   தீர்வு  காண  முயல  வேண்டும். குறிப்பாக அரசாங்க வேலை, குடியுரிமை மற்ற அனைத்தும் பற்றிப் பேசி  அலசி ஆராய வேண்டும். அதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களும் பிரதமரை சந்திக்க வேண்டும். பிரச்சனைகளுக்குத் தீர்வு  காண முயல வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் மற்றவர் மேல் கை நீட்டிப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

இப்போது நம் முன்னே உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர்வு காணக் கூடிய பிரச்சனைகள்  தாம்.  ஆனால் அது வேதமூர்த்தியை மட்டும் சார்ந்தது அல்ல. நீங்கள் அனைவரும் சேர்ந்து தீர்க்கக் கூடிய  பிரச்சனைகள் தான். பழைய ம.இ.கா. பாணி அரசியல் வேண்டாம்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! அது நமது அரசியல்வாதிகளுக்கும் சேர்த்துத்தான்.

நாம் எதிர்க்கட்சி அல்ல!  ஆளுங்கட்சி!

No comments:

Post a Comment