பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர், டான்ஸ்ரீ நடராஜாவைப் பற்றியான சமீபத்திய செய்திகள் கவலையைத் தருகின்றன.
நீண்ட காலமாக அந்த ஆலயத்தை வழி நடத்தி வருபவர். இதற்கு முன்னர் அவரைப் பற்றி பல குறைபாடுகள் நம் முன்னே எழுந்திருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் எந்த வித ஆதாரமும் இல்லை என்பதாகச் சட்டம் அவருக்குத் துணையாக இருந்தது. ஆனால் அதே சட்டம் அவருக்கு இப்போது எதிராக நிற்கிறது! இதைத்தான் காலத்தின் கோலம் என்பதோ!
ஆனாலும் ஒரு சில விஷயங்களில் நான் இன்னும் தெளிவு பெறாதவனாகவே இருக்கிறேன். "கோவில் சொத்து குல நாசம்" என சொல்லுவதுண்டு. இதனை அறியாமலா இத்தனை ஆண்டுகள் அவர் இந்துக்களின் முதல் நிலை கோயிலான பத்துமலையை வழி நடத்தி வந்திருக்கிறார் என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது.
ஒரு நிகழ்ச்சி இன்னும் எனது நினைவில் அப்படியே நிற்கிறது. ஒரு சிறிய கோவிலுக்குத் தலைவராக இருந்த மனிதர் ஒருவர் பணம் கையாடுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் முணு முணுக்கப்பட்டதே தவிர அவரை எதிர்த்துப் பேச யாருக்கும் தைரியம் இல்லை. அவர் இருக்கும் வரை அவர் தான் தலைவர். பின்னர் கால மாற்றத்தில் அவரும் ஓய்வு பெற்றார். மக்களும் அவரை மறந்து போனார்கள்.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் நான் அவரை சந்தித்த போது அவர் போவோர் வருவோரிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நான் பள்ளி மாணவன். என்னை அவர் அறியவில்லை. இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. வேலையில் இருந்த போது ஓரு கம்பீரமான மனிதராக வலம் வந்தவர். கடைசி காலத்தில் அவர் அந்த நிலைமைக்கு ஆளானார். இதில் இன்னொரு வருத்தமான செய்தி. அவரது மகனும் அதே பிச்சை எடுக்கும் நிலைமைக்குப் பின்னர் ஆளானார் என்பது தான்.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டதோ என்னவோ தெரியவில்லை. ஒரு வேளை தெய்வம் நின்று தான் கொல்லுமோ? கோவில் சொத்தை அனுபவிப்பவன் தலை நிமிர்ந்து நடக்கிறான்! கேட்பாரில்லை! நாலு அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக் கொள்ளுகிறான். இனி தனக்கு அழிவில்லை! பாதுகாப்பு கொடுக்க ஆள் இருக்கிறார்கள் என்று மம்மதையோடு நடந்து கொள்ளுகிறான்! பட்டம், பதவிக்கெல்லாம் சிபாரிசு செய்ய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்! இது தான் நம் கண் முன்னே நடக்கின்ற அன்றாட நிகழ்வுகள்!
டான்ஸ்ரீ நடராஜா ஒன்றுமே அறியாதவர் அல்லர். கோவில் சொத்து குல நாசம் என்பதை அறியாதவர் அல்லர். மலேசிய நாட்டின் இந்துக்களின் தலையாய கோவிலை நிர்வாகம் செய்பவர்.
இருந்தாலும் நம்மால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். தப்பு செய்தவன் உப்பைத் தின்று தான் ஆக வேண்டும். இதில் பெரியவன் சிறியவன் என்று யாருமில்லை. சட்டத்தின் முன்னே யாவரும் சமம்.
ஆனாலும் இன்னும் சொல்லுகிறேன்: கோவில் சொத்து குல நாசம்!
No comments:
Post a Comment