Friday 14 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (55)

சீனர் சமூகமே நமக்கு எடுத்துக்காட்டு  (i)

நாம் மலேசியர்கள். நம் நாட்டில் பெரும் பணக்காரர்கள் என்று வரும்  போது  யார் நம் கண் முன்னே வருவர்?

எல்லா இனத்தவரிலும் பணக்காரர்கள் உண்டு.  சீனர், இந்தியர், மலாய்க்காரர் அனைவரிலும் உண்டு.  ஆனால் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் எங்கே போகிறோம்?  எத்தனை கடைகள் இருந்தாலும் கடைசியில் சீனர் கடைகளுக்குத் தான் போகிறோம்! இந்தியர் கடைகள் ஐந்து இருந்தால் சீனர் கடைகள் ஐநூறு இருக்கும் போது நாம் இயல்பாகவே சீனர்களை நாடித்தான் செல்ல வேண்டிய சூழல்!

சீனர்கள் எல்லா விதத் தொழில்களிலும் இருக்கின்றனர். சிறிய, நடுத்தர, பெரிய - இப்படி அனைத்துத் தொழில்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். அதனால் தான் பொருளாதாரம் என்னும் போது அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் இயல்பாகவே அவர்கள் தான் முன்னணியின் நிற்கின்றனர்.

அன்று சிறிய தொழில்களைச் செய்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் இன்று அவைகளைப்  பெரிய தொழில்களாக மாற்றிவிட்டனர்!  எல்லாருமே சிறிய தொழில்களிலருந்து தான் வர வேண்டும். யாரும் விதிவிலக்கல்ல!

சிறிய தொழில்களிலும்,  நடுத்தர தொழில்களிலும் ஈடுபாடு காட்டினால் தான் பெரிய  தொழில்களுக்குப் போக முடியும். அது தான் பரிணாம வளர்ச்சி என்பது. எடுத்த எடுப்பில் பெரிய தொழில்களில் குதித்து விட முடியாது. அது சாத்தியமுமில்லை. வாய்ப்புமில்லை.

இன்று நாட்டின் பொருளாதார சக்தி என்பது சீனர்களின் கையில் தான். எல்லாத் தொழில்களையும் அவர்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர்!  அவர்களிடம் பொருள்களை வாங்கித்தான் மற்ற இனத்தவர் தொழில் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அதனை அப்படி ஒன்றும் எளிதில் மாற்றி விட முடியாது. அவர்களும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை!  அது அவர்களின் கடும் உழைப்பால் நேர்ந்தது. 

நாம், குறிப்பாக தமிழர்கள், சீனர்களிடமிருந்து படிக்க வேண்டியது நிறையவே உள்ளது.  அதுவும் தொழில் ஈடுபாடு வேண்டுமென்றால் நாம் சீனர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தாலே போதும். நாம் தலைநிமிர்ந்து வாழலாம்.

No comments:

Post a Comment