சீனர் சமூகமே நமக்கு எடுத்துக்காட்டு (ii)
உலகத்தில் உள்ள வேறு எந்த மனிதரையும் நாம் தேடி ஓட வேண்டியதில்லை! நமது பக்கத்து வீட்டு அல்லது அடுத்த தெரு அல்லது பக்கத்து தாமானில் உள்ள சீன சகோதரர்களைப் பார்த்தாலே போதும். கொஞ்சம் உற்றுக் கவனியுங்கள். அவர்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள்.
அதெப்படி அவர்களால் முடிகிறது என்கிற கேள்வி எழத்தான் செய்யும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ அவர்கள் பணத்தை நம்புகிறார்கள். முதலில் பணம், பிள்ளைகளின் கல்வி. கல்வி சரியாக அமையாவிட்டால் ஏதாவது தொழில். இப்படித்தான் அவர்களது வாழ்க்கை அமைகிறது.
கல்வியில் தோல்வி என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் போய் வேலை செய்வது என்பது பெரும்பாலும் இல்லை. இந்தியர்களும் மலாய்க்காரர்களும் தான் இந்த வேலைகளுக்கு அடித்துக் கொள்ளுகிறோம்! சீன இளைஞர்கள் ஏதாவது தொழிலைக் கற்றுக் கொண்டு பின்னர் அதனையே தங்களது தொழிலாக்கிக் கொள்கின்றனர்.
சான்றுக்கு ஒன்று சொல்லுகிறேன். ஒரு சிறிய நிறுவனம்.கார்களுக்கு புது டயர் போடுகின்ற அல்லது மாற்றம் செய்கின்ற வேலை. ஒரு சீன இளைஞன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தான். ஓராண்டுக்குப் பின்னர் இன்னொரு சீன இளைஞன் வந்து சேர்ந்தான். சுமார் இரண்டு மூன்று ஆண்டுகள் இருவரும் வேலை செய்தனர். இருவருமே போதுமான பணம் சேர்த்துக் கொண்டனர். இருவரும் வளர்ந்து வரும் இன்னொரு பட்டணத்தில் சொந்தமாக ஒரு கடையை அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் கற்றுக்கொண்ட அதே தொழில். இப்போது அது பெரியதொரு நிறுவனமாக மாறிவிட்டது!
கல்வி குறித்து ஓர் எடுத்துக்காட்டு. ஒரு பாட்டி, தாய், மூன்று பேரப்பிள்ளைகள். பாட்டிக்கு வேலை இல்லை. தாய் ஒரு கடையில் சுத்தம் செய்கின்ற வேலை. பேரன் பெரியவன் படிக்கிறான். இருவர் இன்னும் பள்ளி போகவில்லை. பாட்டி குப்பைகளைக் கிளறி எதை எதையோ பொறுக்கிக் கொண்டிருப்பார். அது அவர் வேலை. தாய் வேலை முடிந்ததும் அவரும் பாட்டியோடு சேர்ந்து குப்பைகளில் மூழ்கிவிடுவார். பேரப்பிள்ளைகளும் பாட்டியோடும் தாயோடும் சேர்ந்து குப்பைகளில் உதவி செய்வர். பாட்டி இவ்வளவு ஆர்வத்தோடு செய்வதற்குக் காரணம் உண்டு. பேரனுக்குக் கணினி வேண்டும். வந்து விலையெல்லாம் விசாரித்துவிட்டுப் போனார். பணம் சேர்ந்ததும் வந்து கணினியை வாங்கினார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவரிடமிருந்ததெல்லாம் கசங்கிப் [போன ஒரு வெள்ளி நோட்டுக்களும் ஷில்லிங்குளும் தாம்.
நம்மோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வீட்டை விற்போம். சொத்தை விற்போம் கணினி வாங்க பள்ளிகள் உதவ வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையை ஏற்படுத்துவோம்!. சொந்தக் காலில் நிற்பது என்பது நாம் விரும்பாதது!
சீன சமூகம் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. சொந்தக் காலில் நிற்பதைத் தான் அவர்கள் கௌரவமாக எண்ணுகின்றனர். கிடைத்தால் ஏற்றுக் கொள்வோம். கிடைக்காவிட்டால் மாறிக் கொள்வோம்! அவ்வளவு தான்!
யாரையும் குறை சொல்லுவதில்லை. நம்முடைய பிரச்சனை நாம் தான் பொறுப்பு. மற்றவர்களைக் குறை சொல்லுவதால் எந்தப் பயனுமில்லை. இது தான் சீன சமூகம்!
நம்மாலும் முடியும்!
No comments:
Post a Comment