Monday 10 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (52)

 சிறுபான்மை தான் ஆனால்....!


நமது மலேசிய இந்தியர்களில் குஜாராத்தியர் என்பவர்கள் சிறுபான்மை இனத்தவர் தான். 

ஏன் நம்மில் பலருக்கு  குஜாராத்தியர் என்றாலே யார் என்று தெரிய வாய்ப்பில்லை  இங்கு பலர் அவர்களைப்  பட்டேல் என்பார்கள். தமிழ் நாட்டில் இவர்களை மார்வாடிகள் அல்லது பணியாக்கள் எனகிறார்கள்.

ஆனால் நம்மில் பலருக்குத் தெரிந்த ஒன்று இவர்கள் பெரும்பாலும் தொழில் செய்பவர்கள். எல்லாப் பெரிய சிறிய பட்டணங்கள் ஒன்று விடாமல் இவர்கள் தொழில் செய்கிறார்கள். அதுவும் குறிப்பாக வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்பவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுடைய தொடர்புகள் பெரும்பாலும் தமிழ்ச் சமூகத்தோடு தான். ஆனால் இப்போது மாறிவிட்டது. மலாய் சமூகத்தினரோடும் அதிகமான தொடர்புகள் ஏற்பட்டுவிட்டது. சீன சமூகத்தோடு வாய்ப்பில்லை. இவர்கள் செய்கின்ற தொழிலைத்தான்  அவர்களும் செய்கிறார்கள்!

ஆனால் இவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் இன்றைய நிலையில்  நாம் அலசி ஆராய்ந்தால் இந்திய சமூகத்தில் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் இவர்கள் தான்!

இவர்களைப் பற்றியான ஒரு விஷயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவர்கள் எங்கும் வேலை செய்ததாகத் தெரியவில்லை!  இந்த நாட்டிற்கு வரும்போதே தொழிலோடு வந்திருக்கிறார்கள்! அதுவும் குறிப்பாக வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்பவர்களாகத்தான் வந்திருக்கிறார்கள்! பின்னர் மற்ற பல தொழில்களில் கவனம்  செலுத்தியிருக்கிறார்கள்.

அவர்களிடம் உள்ள ஒரு சிறப்பு அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களோடு கொண்டு செல்வது தொழில் என்பது மட்டும் தான்.

அவர்கள் இல்லாத நாடுகளே இல்லை எனலாம். எல்லா நாடுகளிலும் அவர்கள் செய்வது வியாபாரம் மட்டும் தான். வியாபாரத்தையும் இவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியாவில் இந்த இனத்தவரே பணக்காரர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பணக்காரர் அம்பானி குஜராத்தியர் தான்.

உலகில் உழைப்பு என்றால் நம்மைப் பொறுத்தவரை அது ஜப்பானியர் அல்லது சீனராகத்தான் இருக்கு முடியும் என்கிறோம். ஆனால் இவர்களோ "குஜாராத்தியர் போல் உழைக்க யாருமில்லை. எங்களோடு யாராலும் போட்டி போட முடியாது!" என்கிறார்கள்! 

மலேசிய இந்தியர்களில் இந்த குஜாராத்தியரே பெரும் பணக்காரர்கள் என்று துணிந்து சொல்லலாம். நமக்கு அவர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை காரணம் அவர்கள் நம்மிடையே  அதிகம் பேசப்படுவதில்லை.

தொழில் செய்வதற்கு சிறிய இனமோ பெரிய இனமோ என்கிற அவசியமில்லை. தேவை எல்லாம் துணிச்சல் தான்.  அந்த துணிச்சல் என்பது குஜராத்தியரிடம் உள்ளது.  அவர்கள் மக்களை நம்புகிறார்கள். அது தான் அவர்களின் வெற்றி.

பணமிருந்தால் நாம் தான் பெரும்பான்மை!


No comments:

Post a Comment