Monday 31 May 2021

மீண்டும் ஊரடங்கு!

 மீண்டும் ஊரடங்கு வந்துவிட்டது!

எதிர்பார்த்தது தான்.  இப்படித்தான் இது வரும் போகும். அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள்  வரப்போவதில்லை.

அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் சட்டத்தை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவார்கள்! இப்போது அந்த ஆட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது!

மக்களின் கஷ்டத்தையோ, பிரச்சனையையோ அரசியல்வாதிகள் கண்டு கொள்வதாக இல்லை. அவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும். கொள்ளை அடிக்க வேண்டும். பதவியில் இருக்கும் வரை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்ட வேண்டும். சுரண்டலுக்குத் தான் முதலிடம்.  தாங்கள் என்ன பணியில் இருக்கிறோம் எனபதைக் கூட அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை.  பதவியில் உள்ளவர்களில் பலர் ஊரடங்குகளை மீறியிருக்கிறார்கள். ஏதோ விசாரணை என்கிற பெயரில் காவல்துறையினர் அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். எல்லாம் கண்துடைப்பு என்பது நமக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.  அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது, என்ன செய்ய?

இங்கு நாம் முக்கியமாக ஒன்றை ஞாபகத்தில் வைக்க வேண்டும். குடும்பங்களில் வேலை இல்லையென்றால்  அவர்களால் என்ன செய்ய முடியும்?  அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு யார் சாப்பாடு போடுவது? ஒருவர் வேலை செய்தாலாவது ஏதோ சமாளிக்கலாம்.   வேலை இருந்தும் வேலைக்குப் போக முடியாமல் வீட்டில் அடைந்து கிடந்தால் அந்த குடும்பம் என்ன செய்யும்?  பிள்ளைகளுக்குத் தெரியுமா வீட்டு நிலைமை, நாட்டு நிலைமை? அவர்களுக்கு நாம் கொடுக்கும் பாடம் எடுபடுமா?

ஆனாலும் ஒன்றை நினைத்து நாம் பெருமிதம் அடையளாம்.  பலர் பல வழிகளில் உணவுகள் வழங்கி உதவி செய்கிறார்கள். அரசாங்கம் கண்களை மூடிக் கொண்டாலும் தனிப்பட்ட முறையில் நிறுவனங்கள், உணவகங்கள், தனிப்பட்ட மனிதர்கள் பல வழிகளில் மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர்.

உண்மையைச் சொன்னால் அரசியல்வாதிகளைத் தவிர நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் நம்மிடையே நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த உலகை வாழ வைக்கிறார்கள்.

பசிப்பவர்களுக்கு உணவுகள் கொடுப்பது தான் முதன்மையானது. மற்றவை எதுவாக இருந்தாலும் அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

ஊரடங்கு என்பது சாதாரண  விஷயம் அல்ல. பல பேருடைய வாழ்க்கை அதில் அடங்கியிருக்கிறது. மேல் நாடுகளில் பசியில்லாமல் தனது மக்களை அரசாங்கங்கள் பார்த்துக் கொள்கின்றன. ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகள் தங்களையே பார்த்துக் கொள்வதால்  மக்களைப் பார்க்க ஆளில்லை!

ஊரடங்கின் போது நல்லதே நடக்க வேண்டும் என வேண்டுகிறேன்!


No comments:

Post a Comment