Thursday 13 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....,......! (54)

சிறிய நடுத்தர தொழில் தான்  நமது வலிமை! 

தொழில் தொடங்கும் நம் இனத்தவர்கள் ஒரு சில குறிப்பிட்ட தொழில்களிலேயே கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக உணவகம் தான் நமது முதன்மைத் தேர்வு! தவறில்லை!

அதை நாம் குறை சொல்லவில்லை. அவர்களுக்குத் தெரிந்த ஒரு தொழிலைத் தான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.  இன்று நம்மில் பலர் சமையற்கலை தெரிந்தவர்களாக இருப்பதால் அதன் விளைவு தான் இது!

ஆனால் நம் இளைஞர்களில் பலர் பல்வேறு திறன்களை அறிந்தவர்களாக இப்போது இருக்கின்றனர் என்பதால் ஒரு சில மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

முடிந்தவரை உணவகங்களைத் தவிர்த்து வேறு பல தொழில்களில் ஈடுபடுவதே சிறப்பாக இருக்கும். மளிகைக்கடைகள் கூட நம்மில் பலர் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். என்ன தான் பேரங்காடிகள் பல இருப்பினும் மளிகைக்கடைகளை அப்படியெல்லாம் ஒழித்து விட முடியாது. அவைகள் இருக்கத்தான் செய்யும். நம் இனத்தவர் பலர் பேரங்காடிகளுக்கு நிகராக பெரும் அங்காடிகளை  நடத்துகின்றனர். ஆனால் தொடர் அங்காடிகளை நடத்துகின்ற அளவுக்கு இன்னும் நாம் வளரவில்லை. அதுவும் சீக்கிரம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

கார் விற்பனைத் துறையில் எனக்குத் தெரிந்து ஓரிருவர் ஈடுபட்டிருக்கின்றனர்.  மலேசிய அளவில் இன்னும் அதிகமானோர் இருக்கலாம். கார் பழுது பார்க்கும் தொழிலில் பலர் இருக்கின்றனர். நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும்  அதன் எண்ணிக்கைப் பெரிது எனச் சொல்லலாம்.  முடித் திருத்தகம் என்பது இப்போது அதனைச் சீனர்கள் நவீனப்படுத்தி அதிகக் கட்டணங்களை வசூலிக்கின்றனர்.  நமது இளைஞர்களும் நவீனத்தைப் பின்பற்றுகின்றனர் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஒரு காலக் கட்டத்தில் அது பெரும்பாலும் நமது சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தொழில். ஆனால் நவீனப்படுத்தாததால் அது நமது கையை விட்டுப் போய்விட்டது. அது மீண்டும் நமது கைக்குத் திரும்புகிறது. இப்போது இளைஞர்கள் பலர் அதிக வருமானம் தரும் தொழில் என்பதால் அதன்பால் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர் என்பது பெரிய மன மாற்றம்.

இன்னும் ஒரு சில தொழில்கள் பெண்கள் வீட்டிலிருந்தே செய்கின்றனர். அதற்குப் போதுமான பொருளாதாரம் இல்லை என்பது தான் காரணம். கேக் போன்ற இனிப்பு வகைகளைச் செய்து வீட்டிலிருந்தே பலர் செய்து பலவித நிகழ்வுகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஒப்பனைத்துறை இப்போது நம்மிடையே வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது.  தையல் துறை நாம் மறந்துவிட்ட ஒரு தொழில்.  ஆனால் பெண்களே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு தொழில்.

பொருளாதார நெருக்கடியினால்  இந்த தொழில்களெல்லாம் பெரிய வளர்ச்சி காண முடியவில்லை. ஆனால் வளர்ந்து வருகிறது. இன்னும் பெரிய அளவில் வளர வேண்டும்.

சிறிய நடுத்தர தொழில்கள் எல்லாமே பாராட்டுக்குரிய தொழில்கள் தாம். ஆனால்  நாம் அதனை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான்  நமது வளர்ச்சி சரியானதாக இருக்கும். இல்லையெனில் என்றுமே நாம் வாடிக்கையாளர்கள் தான் இருப்போம்!

தொழில் என்பது நமது வலிமையைக் காட்டும். சிறிதோ பெரிதோ நம் முத்திரையைப் பதிப்போம்!

No comments:

Post a Comment