இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக நாம் இந்த மண்ணில் வாழ்ந்து வருகிறோம். நமது வளர்ச்சி என்பது பெரிய அளவில் இல்லை என்று சொல்லலாம். அதிலும் பொருளாதார வளர்ச்சி என்பது திருப்திகரமாக அமையவில்லை என்று துணிந்து சொல்லலாம்.
வேறு எந்த வகையில் வளர்ச்சி அடைந்திருக்கிறோம்?
தமிழர்களை விட குறைவான எண்ணிக்கையில் இருக்கும் மலையாளிகள், தெலுங்கர்கள், பஞ்சாபியர்கள் , குஜராத்தியர் - இவர்களோடு ஒப்பிடுகையில் தமிழர்களின் வளர்ச்சி என்பது பேசும்படியாக இல்லை!
தமிழர்களுக்கு என்னன்ன வாய்ப்புக்கள் கிடைக்கின்றனவோ அதே வாய்ப்புக்கள் தான் நம்மிலும் சிறுபானமையினராக இருக்கும் அவர்களுக்கும் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புக்களைச் சரியாக பயன்படுத்துகின்றனர். இதில் யாரையும் குறை சொல்ல ஒன்றுமில்லை.
ஒன்று மட்டும் சொல்லலாம். தமிழர்கள் ம.இ.கா. தலைவர்களை நம்பி ஏமாந்து போனார்கள். நாம் நம்மை நம்பவில்லை. தலைவர்களை நம்பினோம். நாசகமாகப் போனோம்! தலைவர்கள் சுகமாக இருக்கிறார்கள்! தலைவர்கள் என்று சொல்லும் போது தமிழர்கள் மட்டும் அல்ல மலையாளிகள், தெலுங்கர்கள் அனைவரையும் சேர்த்துத்தான்.
சராசரியாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட மலையாளிகள், தெலுங்கர்கள் இருக்கும் அளவுக்கு தமிழர்கள் குறைவாகத்தான் இருக்கின்றனர். இதில் நாம் யாரைக் குற்றம் சொல்ல முடியும்?
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத சமூகம் என்றால் அது தமிழர் சமூகம் தான். கோவில் வேண்டும் என்கிறோம் ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப் புறந்தள்ளுகிறோம். கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் கோவில் தலைவர்கள் பதவியைப் பிறருக்கு விட்டுக் கொடுக்கிறோம்!
நமது பலவீனம் என்பது என்றென்றுமே கல்வி தான். நாம் கல்வியில் பல படிகள் தாண்டி வந்திருக்கிறோம் ஆனால் நமது தமிழர் எண்ணிக்கைக்கு ஏற்ப அது பிரதிபலிக்கவில்லை என்பது தான் உண்மை.
நாம் எப்போதோ கல்வி அற்றவர்களாக இருந்திருக்கலாம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால் இப்போது கல்வி கற்க நிறைய வசதிகள் உண்டு. இப்போதும் ஏதேதோ காரணங்கள் சொல்லிக் கொண்டு உடகார்ந்திருக்கிறோம்! கல்வியின் முக்கியத்துவம் இன்னும் நமது பெற்றோர்கள் உணரவில்லை.
கல்வி தான் நமது முதல் முதலீடு. கல்வி இருந்தால் பிறவற்றை நாம் தேடிக் கொள்ள முடியும். கல்வியை நாம் தேடிக் கொள்ளாதவரை நமது இனம் தான் ஆகக் கீழ் மட்டத்தில் உள்ள வேலைகளைச் செய்ய வேண்டி வரும்!
கல்வி வளர்ச்சி என்பதே அடிமட்டத்தில் இருக்கும் போது பொருளாதார வளர்ச்சிப் பற்றி பேசுவது எங்ஙனம்? இந்த சூழ்நிலையில் கூட நம்மில் ஒரு சிலர் வியாபாரத் துறையில் ஈடுபட்டு பெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றனர். இது அவர்களின் பாரம்பரியம் எனலாம்.
ஒன்றை மட்டும் நம்பலாம். இப்போது நாம் சரியான பாதையில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் நமது சாதனைகளை மற்ற இனத்தவரும் புரிந்து கொள்வர்.
வாழ்க தமிழினம்!
No comments:
Post a Comment